தமிழ்நாட்டில் சிறுவன் மது அருந்துவதாகப் பரப்பப்படும் சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ !

பரவிய செய்தி
திராவிட மாடல் ஆட்சியில் கொலை கொள்ளை கஞ்சா போதை பொருட்கள் இப்பொழுது சாராயம் வேற சிறுவர்களை கூட விட்டு வைக்கவில்லை இந்த பொம்மை அரசு..Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்து 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது சிறுவன் ஒருவன் மது அருந்திவிட்டு தள்ளாடி நடப்பதைப் போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அப்பதிவுகளில், திமுக ஆட்சியில் சிறுவர்களின் நிலைமை மோசமாக செல்கிறது என்றும் சமூக ஆர்வலர்கள் இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறி திராவிட மாடலை விமர்சித்து பகிர்ந்துள்ளனர்.
எங்க போய் முடியப்போகுதோ..திராவிட மாடலின் இரண்டாண்டு சாதனைகளில் இந்த வீடியோ இடம் பெறுமா… இனி தமிழகத்தில் சிறுவர்களின் நிலைமை ரொம்ப மோசமாக போகுது… 😭 pic.twitter.com/t1FyRAe68l
— Johny Bhai 🇮🇳 (@Johni_raja) May 15, 2023
எங்க போய் முடியப்போகுதோ.. இனி தமிழகத்தில் சிறுவர்களின் நிலைமை ரொம்ப மோசமாக போகுது… ஐயா உண்மையான சமூக ஆர்வலராக இருந்தா இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு முக்கியமாக குரல் கொடுங்கள் 😭
தயவுசெய்து அதிக ஆர்டீ செய்யுங்கள் ஆட்சியாளர்கள் கவனத்திற்கு செல்லும் வரை. pic.twitter.com/vHotQGvpD8
— அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩 (@NaMo_Bharathan) May 15, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதன் உண்மையான வீடியோ கடந்த ஏப்ரல் 29 அன்று timli_king_bhilpradesh_15 என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.
மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், “மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே மது அருந்தாதீர்கள். இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக மட்டுமே எடுக்கப்பட்டது. வீடியோவில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் எனக்கு மெசேஜ் செய்யவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோவில் உள்ள சிறுவன் மது அருந்தவில்லை என்பதையும், பொழுதுபோக்கிற்காகவே இச்சிறுவனை புனைவாக இவ்வாறு நடிக்க வைத்துள்ளனர் என்பதையும் அறிய முடிந்தது.
மேலும் timli_king_bhilpradesh_15 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்து பார்த்ததில், இது தமிழ்நாட்டைச் சேர்ந்தவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் இல்லை என்பதையும், இது குஜராத் மாநிலத்திலுள்ள வதோதரா (Vadodara) பகுதியைச் சார்ந்த LAXMAN MUNIYA என்பவரின் பக்கம் என்பதையும் அறிய முடிந்தது. இதன்மூலம் இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
இப்பக்கத்தில் வெளியான வீடியோவில் பின்னணியில் வேறொரு மொழியில் பாடல் இடம்பெற்று இருக்கிறது. அதில் தமிழ் பாடலை இணைத்து தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது போல் பரப்பி உள்ளனர்.
மேலும் படிக்க: ராகுல் காந்தி மது அருந்துவது போல் தவறாக பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !
மேலும் படிக்க: மலேசியாவில் பட்டிமன்றத்திற்கு லியோனி மதுபோதையில் சென்றதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !
இதற்கு முன்பும், சமூக வலைதளங்களில் மது அருந்தியதாக தவறாக பரவிய செய்திகளை ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் சிறுவர்கள் மது அருந்துவதாகப் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. இது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் முனியா என்பவருடைய timli_king_bhilpradesh_15 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்த்தில் பொழுதுபோக்கிற்காக பகிரப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.