சிறுவர்கள் பைக், கார் ஓட்டினால் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை!

பரவிய செய்தி
சிறுவர்களை பைக், கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு சிறைத்தண்டனை. காவல்துறை அதிரடி நடவடிக்கை.
மதிப்பீடு
சுருக்கம்
18 வயது நிரம்பாத சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களுக்கு 1 நாள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது ஹைதராபாத் நீதிமன்றம். இதே போன்று, சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
விளக்கம்
கவனக் குறைவு, உரிய பயிற்சி இன்றி வாகனத்தை கையாளுவது, அதிவேகமாக செல்வது போன்ற காரணங்களால் ஏற்படும் வாகன விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஹைதராபாத் நகரில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவதாகவும், அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் என்று தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில், ஜனவரி மாதத்தில் மட்டும் 5 சிறுவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கூட அதிகளவில் பைக் ரேஸ்களில் ஈடுபடுகின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றும், சிறுவர்களால் ஏற்படும் விபத்துகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று காவல்துறையினர் குழப்பத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், ஓட்டுனர் உரிமம் இன்றி பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிச் செல்லும் 18 வயது நிரம்பாத சிறுவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிப்பதால் எத்தகைய பயனுமில்லை. எனவே, சிறுவர்களின் செயல்களை அனுமதிக்கும் பெற்றோர் மீது சிறுவர்களை வாகனத்தை ஓட்ட அனுமதிப்பது, கவனக்குறைவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வருகிறது தெலுங்கானா காவல்துறை. வழக்குப்பதிவு செய்யப்பட்ட பெற்றோர்களுக்கு 1 முதல் 3 நாள் வரை சிறைத்தண்டனையும், மோட்டார் வாகனச் சட்டம் 180 பிரிவின் கீழ் ரூ.500 அபராதமும் விதித்துள்ளது ஹைதராபாத் நீதிமன்றம்.
அதே நேரத்தில், வாகனங்களை ஓட்டியக் குற்றத்திற்காக சிறுவர்களை ஒரு நாள் மட்டும் சிறுவர் நலக்காப்பகத்தில் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 69 சிறுவர்களின் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், எச்சரிக்கை விடுத்தும் தொடர்ச்சியாக சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த 10 பெற்றோருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பைக் ரேஸ்களில் ஈடுபடும் சிறுவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் விளைவால் சிறுவர்கள் அஞ்சி வாகனம் ஓட்ட தயங்குவர், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று தண்டனை விதித்த நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “ ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் அவர்களுக்கு 3 மாதச் சிறைத்தண்டனையும், ரூ.1, 000 அபராதமும் விதிக்கப்படும்” என்று கூறியுள்ளனர்.
சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்கும் செயலால் இனி வரும் காலங்களில் சிறுவர்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பாதிப்புகள் குறைவதோடு, அவர்களின் எதிர்காலமும் நன்றாக அமையும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில், சிறுவர்களுக்கு மது, சிகெரட் உள்ளிட்ட போதைப் பொருள்களை வழங்குவதை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாலும், அதை துரிதப்படுத்த வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் நென்டீசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.