This article is from Jan 17, 2021

சீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா ?

பரவிய செய்தி

சீனாவின் 20 வழி சாலை, டோல்கேட் அருகில் 50 வழியாக விரிவடைகிறது. மொத்தம் 3,000 கிமீ சாலை 4 முதல் 50 வழி வரை விரிவடைந்து சுருங்குகிறது. சீனாவால் மட்டும் எப்படி இந்த அதிசயத்தை நிகழ்த்த முடிகிறது. ? நம்மால் ஒரு 8 வழி சாலை கூட போட முடியவில்லையே.

Facebook link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

தமிழகத்தில் 8 வழிச் சாலையே போட முடியவில்லை, சீனாவில் 20 வழி நெடுஞ்சாலையை அமைத்து உள்ளதாகவும், இந்த சாலை டோல் கேட் பகுதியில் 50 வழியாக விரிவடைவதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவை காண நேரிட்டது.

உண்மை என்ன ? 

சீனா 20 வழி நெடுஞ்சாலை குறித்து தேடுகையில், G4 Beijing-Hongkong-Macau நெடுஞ்சாலையையே 20 வழி மற்றும் 50 வழி நெடுஞ்சாலை என உலகம் முழுவதும் தவறாக வைரலாக்கப்பட்டு வருவதை அறிய முடிந்தது. சீனாவில் 20 வழி மற்றும் 50 வழிச் சாலை என ஏதும் இல்லை.

G4 Beijing-Hongkong-Macau நெடுஞ்சாலை 2000 கி.மீ தொலைவிற்கு வடக்கில் பெய்ஜிங் மற்றும் தெற்கில் ஷேன்ஜின் நகரங்களை இணைகிறது. இந்த நெடுஞ்சாலை மூலம் 25 மணி நேரத்தில் இரு நகரங்களுக்கு இடையே பயணிக்கலாம்.

சீனாவின் G4 Beijing-Hongkong-Macau நெடுஞ்சாலையில் zhuozhou எனும் நகரத்தின் அருகே அமைந்துள்ள டோல் கேட் பகுதியின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து 50 வழி நெடுஞ்சாலை என தவறாக பரப்பி வந்தனர். உண்மையில், அந்த நெடுஞ்சாலை 4 வழிச் சாலை மட்டுமே.

zhuozhou டோல் கேட் ஆரம்பிப்பதற்கு 650 மீட்டர் முன்பாகவும், மறுபுறம் 450 மீட்டர் தொலைவிற்கு 25 வழிப் பாதையாக இருபுறமும் பிரிந்து மீண்டும் 4 வழிச் சாலையாக மாறுகிறது. சுமார் 1000 மீட்டரில் டோல் கேட் பகுதியில் மட்டுமே இருபுறமும் 25 வழிப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

டோல் கேட் பகுதியில் இருபுறமும் 25 வழிப் பாதையில் இருந்து மீண்டும் 4 வழிப் பாதையாக சுருங்கும் போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அந்நாட்டின் முக்கிய விடுமுறையின் போது zhuozhou டோல் கேட் பகுதியில் எடுக்கப்பட்ட வாகன போக்குவரத்து நெரிசல் புகைப்படம் உலக அளவில் வைரலாகியது.

Twitter link | Archive link 

சீனாவின் 20 வழிச் சாலை என பகிரப்படும் பதிவில் இடம்பெற்ற புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இப்புகைப்படத்தை டெக்சாஸ், மியான்மர் என சமூக வலைதளங்களில் மாற்றி மாற்றி பகிர்ந்த பதிவுகள் கிடைத்தன.

எனினும், இப்புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது அல்லது ஃபோட்டோஷாப் புகைப்படமா என உறுதிப்படுத்த முடியவில்லை. சமூக வலைதளங்களில் மட்டுமே அதிகம் சுற்றித் திரிகிறது.

முடிவு : 

நம் தேடலில், சீனாவின் 20 வழி சாலை, டோல்கேட் அருகில் 50 வழியாக விரிவடைகிறது. மொத்தம் 3,000 கிமீ சாலை 4 முதல் 50 வழி வரை விரிவடைந்து சுருங்குகிறது என பரப்பப்படும் தகவல் தவறானது. சீனாவின் zhuozhou அருகே உள்ள டோல் கேட் பகுதியில் 1000 மீட்டர் அளவிற்கு மட்டும் நெடுஞ்சாலையானது இருபுறமும் 25 வழிப் பாதையாக விரிவடைந்து மீண்டும் 4 வழிப் பாதையாக சுருங்குகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader