சீனா நீல நிறத்தில் ஆப்பிளை விளைவித்ததா?| வீடியோவின் உண்மைத்தன்மை என்ன ?

பரவிய செய்தி
சீனாவில் நீல நிறத்தில் ஆப்பிள்.
மதிப்பீடு
விளக்கம்
சீனாவில் நீல நிறத்தில் ஆப்பிள் பழத்தை உருவாக்கி இருப்பதாக வீடியோ ஒன்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. Father of Engineering என்ற முகநூல் பக்கத்தில் டிசம்பர் 15-ம் தேதி வெளியான வீடியோ பதிவில், மரத்தில் இருக்கும் நீல நிற ஆப்பிள் பழத்தை ஒருவர் வட்ட வடிவமாக வெட்டி எடுத்துக் காண்பிக்கும் 11 நொடிகள் கொண்ட காட்சியை பார்க்க முடிந்தது.
சீனாவில் மரபணு மாற்றம் செய்தோ அல்லது புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நீல நிறத்தில் ஆப்பிளை உருவாக்கி உள்ளார்களா என ஆச்சரியம் எழுந்தது. இதைப் பற்றி தெரிந்து கொள்ளவும், இதற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க ஆர்வம் எழுந்தது.
உண்மை என்ன ?
சீனாவில் நீல நிறத்தில் ஆப்பிள்கள் விளைவிக்கப்படுகிறதா என ஆராய்ந்த பொழுது அது தொடர்பான செய்திகளோ, தகவல்களோ கிடைக்கவில்லை. அதேபோல், பிற நாடுகளில் மக்கள் உண்ணக்கூடிய வகையில் நீல நிறத்தில் ஆப்பிள்களை உருவாக்கி உள்ளார்களா எனத் தேடினோம். அதற்கும் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
மாறாக, 2011-ம் ஆண்டில் யூடியூப் தளத்தில் வெளியான வேறொரு வீடியோ நமக்கு கிடைத்தன. 2011-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி skratchkojio என்ற யூடியூப் சேனலில் “my blue apple ” என்ற தலைப்பில் நீல நிறத்தில் இருக்கும் ஆப்பிளை ஒருவர் காண்பித்து இருக்கிறார். ” இது என்னுடைய நீல ஆப்பிள், வண்ணம் பூசியது அல்ல. மொத்தத்தில் உண்ணக்கூடியது மற்றும் சுவையானது ” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், அந்த வீடியோவின் கம்மெண்ட்களில் நீல நிறத்தில் பெயிண்ட் அடித்து உள்ளதாக பதிவிட்ட ஒருவருக்கு வீடியோவை பதிவிட்டவர் அளித்த பதிலில், ” In this case is Just VFX ” எனக் குறிப்பிட்டு கூறி இருந்தார்.
8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மற்றொரு வீடியோவில் இருக்கும் நீல நிற ஆப்பிள் VFX செய்தது போன்றோ அல்லது பெயிண்ட் அடித்தோ நீல நிறத்திலான ஆப்பிள் என ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்களா என தற்பொழுது பரவும் வீடியோவை ஆராய்ந்தோம்.
அதில், வெட்டப்படும் நீல ஆப்பிளை தவிர சுற்றி மரத்தில் உள்ள ஆப்பிள்கள் அனைத்தும் இயற்கையான நிறத்தில் இருப்பதை காண முடிந்தது. மேலும், ஆப்பிளில் இருந்து ஒரு பகுதியை வெட்டி எடுக்கும் பொழுது பெயிண்ட் போன்று இருக்கும் இடத்தை புகைப்படத்தில் வட்டமிட்டு காண்பித்து உள்ளோம்.
இதேபோல், மரத்தில் இருக்கும் நீல நிற ஆப்பிளை இரண்டு துண்டாக வெட்டும் மற்றொரு வீடியோ காட்சியும் யூடியூப் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில், ஆப்பிளை இரண்டாக வெட்டும் பொழுது மேல் தோல் செயற்கையாக இருப்பதை காணலாம். மேலும், சுற்றியுள்ள ஆப்பிள்களும் இயற்கையான நிறத்தில் உள்ளதை பார்க்கலாம்.
நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, மரத்தில் இருக்கும் பெயிண்ட் அடித்த ஆப்பிளை காண்பித்து சீனாவில் உருவாக்கப்பட்ட நீல நிற ஆப்பிள் என தவறாக வீடியோக்கள் பரவி வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், இந்த வீடியோ எங்கு, எதற்காக எடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கவில்லை.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.