சீனா ஏற்றுமதி செய்யும் நண்டுகளால் ஆபத்தா ?

பரவிய செய்தி
நீங்கள் நண்டு வாங்கும் போது, படத்தில் நண்டின் மேல் உள்ள சிறு ஓட்டையை கவனிக்கவும்.
மதிப்பீடு
சுருக்கம்
சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நண்டுகளில் சிறு துளை மூலம் ஃபார்மாலின், கெமிக்கல்கள் செலுத்துவதாக பரவும் செய்திகள் குறித்த ஆவணங்கள் அல்லது செய்திகள் எங்குமில்லை. எங்கெல்லாம் செய்திகள் பரவின என்பதை விரிவாக படிக்கவும்.
விளக்கம்
நண்டுகள் குறித்த எச்சரிக்கை பதிவு ஒன்று இணையத்தில் மெதுவாக ஆக்கிரமித்து வருகிறது. இவ்வாறான பதிவுகள் நண்டுகள் வாங்குபவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
தமிழ் பதிவு :
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நண்டுகள் புதிதாய் இருக்க வேண்டுமென்று அதனுள் சிறு துளை உருவாக்கி ஊசியின் மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இவ்வாறு, முகநூல் பக்கங்களில் தமிழில் புகைப்படங்களுடன் பகிரப்படுகிறது.
ஆங்கிலப் பதிவுகள் :
தமிழ் தவிர ஆங்கிலத்தில் பரவும் செய்திகளில் சீன நண்டுகளில் ஃபார்மாலின் செலுத்தி ஏற்றுமதி செய்வதாக பரவி வந்தன.
2007-ல் Food and Drug Administration சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் சார்ந்த உணவுகளுக்கு எச்சரிக்கை சவால் விடுத்து இருந்தது. அதற்கு காரணம் ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவுகளில் கார்சினோஜென்ஸ் மற்றும் கொல்லிகள் கலவை மீண்டும் மீண்டும் சோதனையில் கண்டுபிடிக்கபட்டால் இவ்வாறு அறிவித்தனர். இதில், முக்கியமாக ஐந்து மீன் வகைகள் மட்டுமே கூறப்பட்டு இருந்தன. இந்த எச்சரிக்கையானது, ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகள் நன்கு சோதனை செய்யப்பட வேண்டும் என்பதைக் குறித்தது.
“ The New York Times “ என்ற பத்திரிகையில் வெளியான இது தொடர்பான செய்தியில் நண்டு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
மலேசியப் பதிவு :
2014 டிசம்பரில் நண்டுகள் குறித்த எச்சரிக்கைப் பதிவுகள் மலேசியாவில் உள்ள புகைப்படங்களுடன் வலைதளங்களில் பகிரப்பட்டன. அதில், துளையின் மூலம் நீரை செலுத்தி அதன் எடையை அதிகரிக்கச் செய்து விற்பனைக்கு அனுப்புவதாக பகிர்ந்து உள்ளனர். தற்போது பரவும் படங்கள் அங்கு பதிவிடப்பட்டவை.
அங்கும் படங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள் இல்லை.
முடிவு :
சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நண்டுகளில் துளைகளிட்டு ஃபார்மாலின், கெமிக்கல் மருந்துகள் போன்றவை செலுத்துவதாக கூறும் தகவல் முற்றிலும் வதந்தியே. அவற்றின் தொடர்பான எந்தவித செய்திகளும் எங்கும் வெளியாகவில்லை. அது தொடர்பான ஆவணங்கள் எங்கும் இல்லை.
ஆக, சீன நண்டுகள் ஏற்றுமதி குறித்து பரவும் செய்திகள் வதந்திகளே !