சீனா வெள்ளத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர் அடித்து செல்லும் காட்சியா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
சீனாவில் வரலாறு காணாத மழையாம். 1000 வருட காலத்தில் இல்லாத மழையாம். விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. உலகை அழிக்க நினைத்த சீனாவுக்கு இறைவன் கொடுத்த தண்டனையோ!!!
மதிப்பீடு
விளக்கம்
சீனாவில் 1000 ஆண்டுகளில் இல்லாத மழையால் உண்டான வெள்ளத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பஸ்கள், கார்கள் இழுத்து செல்லப்படும் கொடுமையான காட்சி என 1.20 நிமிட வீடியோ ஒன்று ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
சீனாவில் 1000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெருமழை பெய்து புரட்டி போட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீனாவின் க்ஹெனான் மாகாணம் வெள்ளத்தால் தத்தளித்தது. அந்த மாகாணத்தின் ஜெங்ஜோ நகரில் மூன்று வருடங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாளில் கொட்டி தீர்த்ததில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளதாக ஜூலை 21-ம் தேதி பிபிசி செய்தியில் வெளியாகி இருக்கிறது.
சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் வெள்ளத்தில் மூழ்கியதும், கார்கள் குப்பைகள் போல குவிந்து இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிபிசி வெளியிட்டு இருந்தது.
ஆனால், வைரல் செய்யப்படும் வீடியோவில் விமானங்கள், ஹெலிகாப்டர், பஸ், கார்கள் அனைத்தும் அடித்து செல்லப்படுவது பதிவாகி இருக்கிறது.
ஆகையால், வீடியோவின் கீஃப்ப்ரேம்களை எடுத்து தேடுகையில், 2011-ம் ஆண்டு wsj இணையதளத்தில், ” மார்ச் 11 சென்டாய் விமான நிலையம் மற்றும் வடக்கு ஜப்பான் முழுவதும் உள்ள துறைமுக நகரங்களைத் தாக்கிய சுனாமியால் வாகனங்கள் மற்றும் விமானங்கள் அடித்து செல்லப்பட்டதாக ஜப்பானிய கடலோர காவல்படை வீடியோவை வெளியிட்டுள்ளது ” என ராய்ட்டரஸ் உடைய வீடியோ வெளியாகி இருக்கிறது.
theatlantic எனும் இணையதளத்தில் 2011 ஏப்ரல் 28-ம் தேதி ஜப்பானிய கடலோர காவல்படை வெளியிட்ட வீடியோ என விமானங்கள், ஹெலிகாப்டர் மிதக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
முடிவு :
நம் தேடலில், சீனாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கார்கள் அடித்து செல்லப்படுவதாக வைரலாகும் வீடியோ சீனாவைச் சேர்ந்தது அல்ல, 2011-ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.