பாஜக 430 இடங்களில் வெற்றி பெறுமெனச் சீன ஊடகம் குளோபல் டைம்ஸ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகப் பரவும் பொய்!

பரவிய செய்தி

என்ன டோலர்கள் இது?..உங்க முதலாளி தேசப் பத்திரிக்கையே இப்படிச் சொல்றான்?…

X link

மதிப்பீடு

விளக்கம்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய நிலையில் அன்றைய தேதி காலை 7 மணி முதல் கடைசி வாக்குப்பதிவு நாளான ஜூன் 1ம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாஜக 430 இடங்களில் வெற்றி பெறும் என்று சீன அரசு நடத்தி வரும் ’குளோபல் டைம்ஸ்’ என்ற ஊடகம் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது. அப்பதிவில் பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என குளோபல் டைம்ஸ் கணிப்பு வெளியிட்டுள்ளதாக ஒரு பட்டியல் காண்பிக்கப்பட்டுள்ளது. 

உண்மை என்ன?

குளோபல் டைம்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு எனப் பரப்பப்படும் தகவல் குறித்த முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடினோம். 

அவர்களது தளத்தில் கடந்த 13ம் தேதி கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லை விவகாரம் தொடர்பான அக்கட்டுரையில் Shanghai Academy of Social Sciences-ஐ சேர்ந்த Hu Zhiyong என்ற ஆய்வாளர் கூறிய கருத்தும் இடம் பெற்றுள்ளது.

Article link

இந்தியா – சீனா இடையேயான எல்லை விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மோடி அமைதியான போக்கையும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையான போக்கையும் கையாள்வதாகத் தோன்றலாம். தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாகவே 430 இடங்களைக் கைப்பற்ற அக்கட்சி திட்டமிட்டது. சீனாவுடனான உறவு சுமுகமாக இருப்பதாக ஒரு தோற்றத்தை வாக்காளர்களிடம் காண்பித்து swing வாக்காளர்களின் வாக்குகளைப் பெற அவர் முயல்கிறார் என்று Hu Zhiyong  கூறியுள்ளார். 

இது Hu Zhiyong யூகத்தின் அடிப்படையில் கூறிய தனிப்பட்ட கருத்து மட்டுமே. இந்த எண்ணிக்கை (430) எந்த கருத்துக்கணிப்பின் அடிப்படையிலும் கூறப்பட்டது கிடையாது. மேலும் பரவக் கூடிய செய்தியில் இருப்பது போல் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக எவ்வளவு இடங்களில் வெற்றி பெறும் என எந்த பட்டியலும் குளோபல் டைம்ஸ் கட்டுரையில் கூறப்படவில்லை. 

இந்தியாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபடுவது தொடர்பாக ஒரு செய்தி அத்தளத்தில் கடந்த மார்ச், 19ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக வெற்றிப்பெறும் என கூறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் எந்த கருத்துக் கணிப்பு, யார் வெளியிட்டது என எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.

இவற்றிலிருந்து குளோபல் டைம்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு எனப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது. 

முடிவு: 

பாஜக 430 இடங்களில் வெற்றி பெறும் எனச் சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது இந்தியா – சீனா எல்லை தொடர்பாக Hu Zhiyong என்பவர் சொன்ன தனிப்பட்ட கருத்தின் ஒரு பகுதி மட்டுமே.  குளோபல் டைம்ஸ் அப்படி எந்த கருத்துக் கணிப்பையும் வெளியிடவில்லை.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader