சீனாவில் பொது இடத்தில் தொழுகை நடத்திய முஸ்லீம் மீது சீனர் தாக்குதல் எனப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
சீனாவில் பொது இடத்தில் தொழுகை நடத்திய உய்க்குர் முஸ்லீம் மீது சீனர் தாக்குதல்
மதிப்பீடு
விளக்கம்
சீனாவில் பொது இடத்தில் தொழுகை நடத்திய உய்க்குர் (இஸ்லாமியரில் ஒரு பகுதி) முஸ்லீம் மீது சீனர் தாக்குதல் நடத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.
சைனாவில் அதிபர் அல்லது அரசாங்த்துக்கு எதிராக தகாத வார்த்தை பிரயோகம் செய்தால் என்ன தண்டனை தெரியுமா?
இந்தியாவில் உண்டியல் குலுக்கி நாட்டிற்கு எதிராக வன்மத்தை கக்கும் கம்யூனிஸ்ட்கள் இந்த வீடியோவை அவசியம் பார்க்கவும். pic.twitter.com/RSHiC6ew3F
— Suresh நீலகண்டன். 1 (@Suresh33737771) June 30, 2023
அதேவீடியோவினை சீன அரசை எதிர்த்துத் தகாத வார்த்தை பிரயோகம் செய்த நபருக்குத் தண்டனை அளிக்கப்படுவதாக கூறியும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், அது தாய்லாந்து நாட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர் ஒருவரை மேலதிகாரி அடித்த சம்பவத்துடன் தொடர்புடையது என்பதை அறிய முடிகிறது.
சீனா எனப் பரப்பக்கூடிய வீடியோ காட்சிகளைக் கொண்ட செய்தி ஒன்று ‘Today Line’ என்னும் இணையதளத்தில் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மொழியாக உள்ள தாய் மொழியில் உள்ள அச்செய்தியை மொழிபெயர்த்துப் படித்ததில், அந்நிகழ்வு ஒரு நிதி நிறுவனத்தில் மேலதிகாரி ஒருவர் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர் ஒருவரை அடித்தது என்பது தெரிய வந்தது.
கடனை வசூல் செய்யும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், சரியான முறையில் கடனை வசூல் செய்யவில்லை என உயர் அதிகாரி ஒருவர் அந்த ஊழியரை அலுவலகத்தில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து இதுகுறித்து அந்நாட்டுக் காவல் துறை நடவடிக்க மேற்கொண்டுள்ளது.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான ஊழியருடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் இச்சம்பவம் குறித்துக் காவல் துறையிடம் வாக்குமூலமும் அளித்துள்ளார். அது மட்டுமின்றி இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக லெப்டினன்ட் ஜெனரல் கோர்ஞ்சாய் கூறியுள்ளார்.
பரவிய வீடியோ பற்றி ‘TNN Online’ மற்றும் ‘Thairath Online’ போன்ற யூடியூப் பக்கங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து பரவக் கூடிய வீடியோ சீனாவில் நிகழ்ந்தது அல்ல என்பதையும், அந்நபர் பொது இடத்தில் தொழுகை செய்ததற்காகவோ, அரசை எதிர்த்துப் பேசியதற்காகவோ தாக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.
மேலும் படிக்க : கர்நாடகாவில் ஹிஜாப் உரிமைக்காக கோஷமிட்ட முஸ்கானின் லண்டன் வாழ்க்கை எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !
இதற்கு முன்னர் முஸ்லீம்கள் குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலிச் செய்திகள் பற்றிய உண்மைத் தன்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : பெங்களூரில் இந்துக்களின் கடைகளில் பொருட்களை வாங்கக் கூடாது என முஸ்லீம்கள் பேசியதாகப் பரவும் ராஜஸ்தானின் பழைய வீடியோ !
முடிவு :
நம் தேடலில், சீனாவில் பொது இடத்தில் தொழுகை செய்த நபர் கடுமையாகத் தாக்கப்பட்டார் எனப் பரவும் வீடியோ உண்மை அல்ல. அது 2020ம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் மேலதிகாரி தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர் ஒருவரைத் தாக்கிய வீடியோ என்பதை அறிய முடிகிறது.