நிலம் எங்கள் உரிமை: சீனாவில் நிலம் தர மறுத்து வியப்பாக இருக்கும் காட்சிகள்!

பரவிய செய்தி
என் நிலம் என் உரிமை என சீனாவில் ஒருத்தன் ரோடு போட நிலம் தர மாட்டேன்னு சொல்லி கோர்ட்டில் ஸ்டே வாங்கி கவர்மென்ட் கண்ணிலேயே விரல் விட்டு ஆடுறான்.
மதிப்பீடு
சுருக்கம்
சீனாவில் புதிதாக அமைய இருந்த சாலைக்கான பகுதியில் இருக்கும் தன் நிலத்தை உரிமையாளர் வழங்க மறுத்த காரணத்தினால் சாலைகள் அமைக்கப்பட்டும் இடையூறாக வீடு இருக்கும் காட்சி. இது போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
விளக்கம்
நாட்டின் வளர்ச்சி அதற்காக நிலங்களை வழங்குங்கள் என்று மென்மையாக கூறியும், சில இடங்களில் அதிரடியாக நிலங்களை கையகப்படுத்தும் சம்பவங்கள் நாட்டில் அவ்வபோது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த நிலத்தை, விவசாயம் செய்து வந்த நிலத்தை தர மறுக்கும் மக்களை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர் என்றும் கூறுவதுண்டு.
என் நிலம் என் உரிமை என்று கூறக் கூட உரிமையற்றவர்களாக இருப்பவர்கள் பலர் ! ஆனால், சீனாவில் ஒருத்தன் என் நிலம் என் உரிமை என சாலை அமைப்பதற்கு நிலம் தர மாட்டேன் என்றுக் கூறி நீதிமன்றத்தின் வாயிலாக தடை வாங்கி உள்ளான். சாலை அமைத்தாலும், வீடு மட்டும் தனியாக சாலையின் நடுவில் இருக்கும் காட்சி என சமீபத்தில் இப்படங்கள் பரவத் துவங்கியுள்ளது.
“ Nail Houses “ :
சீனாவின் ஹெணன் மாகாணத்தில் மே 16, 2015-ல் புதிதாக அமைக்க இருந்த சாலையின் மையத்தில் வீடு ஒன்று இடையூறாக இருந்துள்ளது. சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்கள் அளிக்கும் இழப்பீடு தொகையை ஏற்க மறுத்து தன் நிலத்தை வழங்க மறுத்துள்ளார் வீட்டின் உரிமையாளர். அதன் விளைவே இந்த தோற்றம். அக்கட்டிடத்தின் மேலே சீன நாட்டின் கொடி பறப்பதையும் காணலாம்.
” நிறுவனங்கள் வழங்கும் இழப்பீடை ஏற்க மறுத்ததால் வீட்டை இடிக்க முடியாமல் இருந்துள்ளனர் சாலை கட்டமைப்பு பணியை மேற்கொள்பவர்கள். சீனாவில் இவை புதிதாக நடைபெறுபவை அல்ல. பல இடங்களில் நடைபெறும் திட்டங்களுக்கு நடுவில் இதுபோன்ற வீடுகள் இருப்பதை காணலாம் “.
இவ்வாறான வீடுகளை “ Nail Houses “ ஆணி வீடுகள் என்றழைப்பர். சீனாவில் சாலை, அடுக்குமாடி கட்டிடம், பாலங்கள் என திட்டம் நிறைவேறிய இடங்களிலும் இவ்வாறான வீடுகள் பல தனியாக இருப்பதை காண முடிகிறது.
” வீட்டின் உரிமையாளர்கள் நிலத்தை வழங்க மறுப்பதற்கு இரு காரணங்களே. ஒன்று நிலத்தை இழந்தால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், இரண்டாவது நிறுவனங்கள் வழங்கும் இழப்பீடு தொகை போதாது என அதிகத் தொகையை எதிர்பார்ப்பது ஆகியன “.
” நிலம் என் உரிமை ” என்று கூற அனைவருக்கும் உரிமை உண்டு. தேசத்தின் வளர்ச்சி என்றால் நிலத்தை வழங்க எவரும் தயங்கமாட்டார்கள். ஆனால், வளர்ச்சி எனக் கூறி அநீதி இழைக்கப்பட்டால் உரிமையை நிலைநாட்டுவர் எம் மக்கள்.