என்னமா பொய் சொல்றாங்க: மோடியை எதிர்த்ததால் சீன அதிபரை வீட்டுக் காவலில் வைத்ததாக வதந்தி !

பரவிய செய்தி

வணக்கம் நண்பர்களே சீன அதிபர் ஜீ ஜிங்பிங் வீட்டு காவலில் வைக்கபட்டது உண்மை தான். காரணம் மோடி தலைமையிலான பாரதத்தை எதிர்க்க வேண்டும் மிரட்ட வேண்டும் என்பதற்காகவே தனது முழு சிந்தனையையும் பயன்படுத்தி தன்னுடைய நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமின்றி பல வகையிலும் தோல்வியை கண்டுள்ளதால் வந்த பிரச்சினை.

ஒன்று : கொரானா தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் ஜீ ஜிங்பிங் தோல்வி. அதே கொரானாவை கட்டுபடுத்துவதில் மோடிஜீ வெற்றி கண்டுள்ளார்

இரண்டு : கொரானா தடுப்பூசி கண்டுபிடித்ததில் ஜீ ஜிங்பிங் அரசுக்கு தோல்வி. அதே கொரானா தடுப்பைசி கண்டுபிடித்ததில் மோடி ஜீ அரசு வெற்றி கண்டுள்ளது

மூன்று : ஜீ ஜிங்பிங் கொரானா தடுப்பூசி போடுவதில் ஒரு ஒழுங்கு முறையில்லாமல் போடப்பட்டது மட்டுமின்றி அந்த தடுப்பூசிகள் சரியாக பலன் தராததால் இன்று வரை ஒமிக்ரான் வகையை சேர்ந்த கொரானாவினால் லாக்டவுன் முடிந்தபாடில்லை இன்றும் தொடர்கிறது. அதனால் சீனாவின் பொருளாதாரம் மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. அதே கொரானா தடுப்பூசி போடுவதில் மோடி அரசு வெற்றி கண்டு நம் பாரதம் சகஜமான சூழ்நிலையில் இன்றைக்கு பிரிட்டன் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளி பாரதம் 5துவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

இது எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவின் பாதுகாப்பே ஜீ ஜிங்பிங் அவர்களால் கேள்விகுறியாக உள்ளதாக அவர்மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காரணம் இந்தியாவை உளவுப்பார்க்க சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வந்தது அல்லவா

அந்த கப்பலால் இந்தியாவை உளவு பார்க்க முடியவில்லை மாறாக அந்த கப்பலுடைய அனைத்து டேட்டாவையும் நமது இந்திய செயற்கை கோள்கள் எடுத்துவிட்டன. இதுதான் ஜீ ஜிங்பிங் மீது அந்நாட்டு பாதுகாப்பு துறைக்கு கோபம். அதனால் ஜீ ஜிங்பிங் வீட்டு காவலில் வைக்கபட்டுள்ளார்.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது உண்மை என்றும், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவை எதிர்த்து பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விசங்களில் தோல்வியை கண்டதால் அந்நாட்டு பாதுகாப்பு துறையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பாஜகவினரால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Facebook link 

உண்மை என்ன ? 

சீன அதிபர் ஜின்பிங் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செப்டம்பர் 16ம் தேதி சீனா திரும்பினார். ஆனால், அதன்பிறகு அவர் பொதுவெளியில் காணப்படாத காரணத்தினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக சர்வதேச அளவில் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சீன நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகத்திடம் இருந்து தகவல்கள் ஏதும் வெளியாகாமல் இருந்து வந்தன.

மேலும், ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், சீன நாட்டின் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாகவும் வதந்திகள் பரவத் தொடங்கிது.

இதையடுத்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீன அதிபர் ஜின்பிங் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றதாக செப்டம்பர் 27ம் தேதி செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மத்திய ஆசியாவில் இருந்து வந்த பிறகு பெய்ஜிங் நகரில் நடைபெற்ற கண்காட்சியில் ஜின்பிங் பங்கேற்று இருக்கிறார். 

செப்டம்பர் 27-ம் தேதி கண்காட்சியைப் பார்வையிட்ட ஜின்பிங் மாஸ்க் அணிந்து இடம்பெற்ற புகைப்படத்தை சீனா நாட்டைச் சேர்ந்த சீனா டெய்லி செய்தி ஊடகம் வெளியிட்டு இருக்கிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு சீனாவிற்கு திரும்பிய பிறகு ஜின்பிங் ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக் கொண்ட காரணத்தினால் பொதுவெளியில் வரவில்லை என wion உள்ளிட்ட செய்தி ஊடகத்தில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பொதுநிகழ்வுகளில் கலந்து கொண்டதன் மூலம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாகப் பரவிய தகவல் வதந்தி என்பது உறுதியாகிறது. மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்ததால் ஜின்பிங் அந்நாட்டு பாதுகாப்புத்துறையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக மற்றொரு வதந்தியையும் பரப்பி வருகிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader