20,000 கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கொல்ல சீனா நீதிமன்றத்தை நாடியதா ?

பரவிய செய்தி
மேற்கொண்டு வைரஸ் பரவுவதை தடுக்க 20,000 கொரோனா வைரஸ் நோயாளிகளை கொல்ல அனுமதிக்க வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளது சீனா. சீன உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபரப்பு தீர்ப்பு.
மதிப்பீடு
விளக்கம்
2019 டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் பகுதியை மையமாகக் கொண்டு பரவிய கொரோனா வைரஸ் தற்பொழுது வரை அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 2019 nCoV கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு வதந்திகள், தவறான தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
இதுவரை சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 600-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு, ஆயிரக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இப்படி இருக்கையில், சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கும் 20,000 நோயாளிகளை கருணை கொலை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்து நீதிமன்றத்தை நாடியதாகவும், அதற்கான தீர்வு பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக உள்ளதாகவும் கூறி கதிர் நியூஸ் இணையதளத்தில் வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த செய்தியை முகநூலில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆகையால், இந்த செய்தியின் தொடக்கம் குறித்து ஆராந்து பார்த்தோம். அப்போழுது, வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வைரலாகும் ஆங்கில செய்தியின் லிங்கை காண முடிந்தது.
ab-tc.com எனும் சிட்டி நியூஸ் இணையதளத்தில், ” சீனாவின் அதிகபட்ச அதிகாரம் கொண்ட உச்ச குடிமக்கள் நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை சீனாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொரோனா வைரஸ் நோயாளிகளை மொத்தமாக கொலை செய்ய அனுமதி அளிக்கும் என எதிர்பார்ப்பதாக ” கூறப்பட்டுள்ளது. ab-tc.com இணையதளத்தில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு உள்ளது கதிர் இணையதளம்.
ஆனால், அந்த செய்தியை வெளியிட்ட ab-tc.com இணையதளத்தில் சீனாவின் அதிகாரப்பூர்வ தகவல்கள், ஆவணங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை. மேலும், இச்செய்தியை வெளியிட்டவரின் பெயர் ஏதும் குறிப்பிடவில்லை. ” Local Correspondent ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், செய்தி வெளியிட்ட இணையதளத்தை ஆராய்ந்த பொழுது இதற்கு முன்பாகவே தவறான தகவல்கள் அடங்கிய கட்டுரையை வெளியிட்டதை அறிய முடிந்தது.
தன் நாட்டில் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கருணை கொலை செய்ய நீதிமன்றத்தை அணுகினால் அது மனித உரிமை மீறல் தொடங்கி உலக நாடுகளின் கண்டனங்களை பெற்று இருக்கும். ஆனால், சீன அரசு அப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் எதிலும் வெளியாகவில்லை. மேலும், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்திலும் அப்படியொரு வழக்கே பதிவாகவில்லை.
சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 20,000 மக்களை கொல்ல அந்நாட்டு அரசு நீதிமன்றத்தை நாடியதாக கதிர் நியூஸ், வாட்ஸ் அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் செய்தியானது தவறான தகவல். அவ்வாறு பரவக் காரணமாக இருந்த ab-tc.com இணையதளம் தவறான தகவல்களை வெளியிட்டு உள்ளது. ஆதாரமில்லாத, அச்சத்தை ஏற்படுத்தும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.