சீனாவின் போர் விமானத்தை தைவான் சுட்டு வீழ்த்தவில்லை| வைரலாகும் வீடியோக்கள் !

பரவிய செய்தி
சீனாவின் போர் விமானத்தை தைவான் சுட்டு வீழ்த்தி உள்ளது..சீன விமானி படுகாயம்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் எல்லைப் பிரச்சனை மூண்டதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதற்கிடையில், சீனாவின் சு-35 எனும் போர் விமானத்தை தைவான் சுட்டு வீழ்த்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய தேசிய ராணுவம் எனும் முகநூல் பக்கத்தில் தைவான் சீனாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் ஒரு சீன வீரர் படுகாயம் எனக் கூறி இரு வீடியோக்களை பகிர்ந்து உள்ளனர்.
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் மோதலான சூழல் நிலவி வருவதால் இந்தியர்கள் இவ்வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். இந்திய அளவில் இவ்வீடியோ வைரலாகியும் வருகிறது. ஆகையால், இவ்வீடியோ குறித்து தெரிந்து கொள்ள தீர்மானித்தோம்.
தைவான் மறுப்பு :
” சீனாவின் சு-35 போர் விமானம் தைவானின் வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறும் ஆன்லைன் வதந்திகளுக்கு பதில் அளிக்கும் வகையில், ஆர்ஓசிஏர்ஃபோர்ஸ் இதை போலியான செய்தி என திட்டவட்டமாகக் கூற விரும்புகிறது. இதை நெட்டிசன்கள் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம் மற்றும் இத்தவறான செயலைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம் ” என தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
In response to rumors online that claim a Chinese Su-35 fighter jet had been shot down by Taiwan air defense systems, #ROCAirForce would like to categorically state this is fake news. We urge netizens to not spread it and strongly condemn this malicious act.
— 國防部 Ministry of National Defense, R.O.C. (@MoNDefense) September 4, 2020
சீனாவின் போர் விமானத்தை தங்கள் நாடு சுட்டு வீழ்த்தியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவலுக்கு தைவான் நாட்டின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது தைவான், இந்திய செய்திகள் மட்டுமன்றி சர்வதேச செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது. மேலும், போர் விமானத்தின் வீடியோ தொடர்பாக பல வதந்திகள் பரவி வருவதாக தைவான் செய்தியில் வெளியாகி இருக்கிறது. சிஜிடிஎன் நியூஸ் தயாரிப்பாளர் ஷென் ஷிவெய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தைவான் நாட்டின் மறுப்பைப் பதிவிட்டு இருக்கிறார்.
#Breaking ⚠️ Fake News on Taiwan shot down Chinese #PLA Su-35. #Taiwan defense department emphasized that rumors on the Internet that “Taiwan shot down the PLA Su-35” are false. Taiwan Air Force condemned the publisher of the rumor for trying to create chaos. pic.twitter.com/BCnhwFoqb4
— Shen Shiwei沈诗伟 (@shen_shiwei) September 4, 2020
சீனாவின் போர் விமானம் சு-35 சுட்டு வீழ்த்தப்பட்டதாக பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆனால், வைரல் வீடியோவில் இடம்பெற்ற விமான விபத்தின் காட்சிகள் எங்கு எடுக்கப்பட்டது, தாக்கப்பட்டதா அல்லது தொழில்நுட்ப காரணத்தினால் விபத்துக்குள்ளானதா என தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. சீன போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக சீன செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
சீனாவிற்கு அருகே அமைந்துள்ள தைவான் நாட்டிற்கும், சீனாவிற்கும் இடையே மோதலான போக்கே நிலவி வருகிறது. தன்னாட்சி நாடாக செயல்பட்டு வரும் தைவான் தங்கள் அதிகாரத்தின் கீழே இருப்பதாகவே சீனக் குடியரசு கூறி வருகிறது. இதனால், தைவான் நாடு அமெரிக்காவின் உதவியை நாடியே இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், சீனாவின் போர் விமானத்தை தைவான் சுட்டு வீழ்த்தியதாக பரவும் தகவலுக்கு தைவான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது என்றும், உறுதியான மற்றும் ஆதாரமில்லாத பல வீடியோக்கள் பரவி வருகின்றன என்றும் அறிய முடிகிறது.