75 இந்திய வீரர்கள் தங்கள் கஸ்டடியில் இருப்பதாக சீனா கூறியதா ?

பரவிய செய்தி
50 இந்திய வீரர்கள் இறந்ததாகவும், மேலும் 75 இந்திய வீரர்கள் தமது கஸ்டடியில் இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. எல்லையில் என்னத்தான் நடக்கிறது??
மதிப்பீடு
விளக்கம்
லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்திய தரப்பில் 50 இந்திய வீரர்கள் இறந்ததாகவும், 75 இந்திய வீரர்கள் தங்களின் கஸ்டடியில் இருப்பதாகவும் சீன தரப்பில் கூறப்பட்டுள்ளதாக ஜிங் ஜி என்கிற பெயரில் உள்ள ட்வீட் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
சீனா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இந்திய ராணுவ வீரர்கள் இருப்பதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இரு நாட்டின் வெளியுறவுத்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.
சீன ராணுவ அதிகாரி எனப் பகிரப்படும் ட்வீட் பக்கத்தில் தேதி, நாள் போன்றவை இடம்பெறவில்லை. jing xi என்கிற பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் சென்று பார்க்கையில், சமீபத்திய மோதலுக்கு பிறகு எல்லை மோதல் குறித்த எந்தவொரு ட்வீட் பதிவும் வெளியாகவில்லை. இந்த ட்விட்டர் கணக்கு ப்ளூ டிக் பெறாத கணக்கு.
இந்த ட்வீட் பக்கத்தில் பின் செய்யப்பட்ட ட்விட்டில் சீன அதிபர் ஜின்பிங் உடைய புகைப்படத்துடன் வெளியான பதிவிலேயே எடிட் செய்து வதந்தியை பரப்பி உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
ப்ளூ டிக் வாங்காத @chinajingxi எனும் ட்விட்டர் கணக்கு மார்ச் 19, 2020-ல் ஹாங்காங்கை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டு உள்ளது. அந்த ட்விட்டர் கணக்கில் உள்ள பெண் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2016 நவம்பர் 14-ம் தேதி சீன பெண் போர் விமானி Yu Su விபத்தில் இறந்ததாக இவரின் புகைப்படம் செய்தியில் வெளியாகி உள்ளது.
நமது தேடலில், இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதலில் இந்திய வீரர்கள் 50 பேர் இறந்துள்ளதாகவும், 75 பேர் கஸ்டடியில் இருப்பதாகக் கூறி வைரலாகும் ட்வீட் பதிவு போலியானது. போலியான ட்வீட் பதிவை பகிர வேண்டாம்.