சின்ன சேலத்தில் இளைஞரை தாக்கும் காவல் ஆய்வாளரின் வைரல் வீடியோ.. பின்னணி என்ன ?

பரவிய செய்தி

சின்ன சேலம் அருகே லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் அவர்களை பற்றி முகநூலில் பதிவு போட்டதால் அவரை வீடு புகுந்து தாக்கும் ஆய்வாளர் அவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுமா????

மதிப்பீடு

விளக்கம்

சின்ன சேலம் அருகே லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் பற்றி முகநூலில் பதிவு பதிவிட்ட இளைஞரை வீடு புகுந்து தாக்கும் ஆய்வாளர் என 3 நிமிட வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

சின்ன சேலம் பகுதியில் இளைஞர் ஒருவரை காவல் ஆய்வாளர் தாக்குவதாக வைரலாகும் வீடியோ தற்போது எடுக்கபட்டது அல்ல, கடந்த 2020-ல் நிகழ்ந்தது. அப்போதைய செய்திகள் பலவற்றிலும் இச்சம்பவம் பற்றி பதிவாகி இருக்கிறது.

2020 ஏப்ரல் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாமக ஒன்றிய செயலாளர் சக்திவேல், சின்ன சேலம் காவல் நிலைய ஆய்வாளர் சுதாகர் பாமகவினரை கைது செய்ததற்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார்.

இதனால் கோபமடைந்த காவல் ஆய்வாளர் சுதாகர் மதுபோதையில் ஏப்ரல் 10-ம் தேதியன்று நள்ளிரவில் சக்திவேல் வீட்டிற்குள் புகுந்து சட்டைப் பிடித்து வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

Twitter link  

காவல் ஆய்வாளர் சுதாகர் பாமக நிர்வாகியை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இச்சம்பவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள், ” காவல் ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டது மட்டும் போதாதது. அவருக்கு மது ஒழிப்பு பணி வழங்கப்பட்டு இருந்த நிலையில், அவர் குடிபோதையில் மூங்கில்பாடி வந்து மின்சாரத்தை துண்டித்து பாமக நிர்வாகியை தாக்கி இருப்பது காவல்துறையின் புனிதத்தை கெடுக்கும் செயல் ” என கண்டனம் தெரிவித்து இருந்தார்.

முடிவு: 

நம் தேடலில், சின்ன சேலம் அருகே லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் அவர்களை பற்றி முகநூலில் பதிவு பதிவிட்டதால் அவரை வீடு புகுந்து தாக்கும் ஆய்வாளர் எனப் பரவும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு பாமக நிர்வாகியை காவல் ஆய்வாளர் தாக்கிய போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader