சோழ இளவரசி குந்தவையின் அரிய புகைப்படம் எனப் பரவும் நையாண்டிப் பதிவு !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சோழ நாட்டு இளவரசி குந்தவையின் அரிய புகைப்படம் மலேசியாவில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து கிடைத்துள்ளது என ஓர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
சோழ இளவரசி குந்தவையின் ஓவியம் கூட இல்லை, அப்போது கேமரா ஏது எனப் பலரும் கமெண்ட் செய்து பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
வைரலாகும் புகைப்படம் குறித்து இணையத்தில் தேடியபொழுது, அசத்தப்போவது யாரு, கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர் இதனைத் தனது முகநூலில் முதன்முதலில் பதிவிட்டுள்ளார் என தெரியவந்தது.
நடிகர் வெங்கடேஷ் இதனை ஒரு நையாண்டி பதிவாகத் தான் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் இதனை உண்மை என நம்பி சிலர் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதேபோல், தஞ்சை பெருவுடையார் கோவில் கோபுரத்தையும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை வேடத்தில் வரும் த்ரிஷாவின் முடி அலங்காரத்தையும் ஒப்பிட்டு நையாண்டியாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படம் பார்த்த பூரிப்பில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது சோழ நாட்டு இளவரசி குந்தவை என நம்பி சிலர் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அவர் பயன்படுத்திய புகைப்படம் குறித்து தேடுகையில், ” ரெட்டிட்(Reddit) இணையத்தளத்தில் “1872ல் மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள மணப்பெண்” என்ற தலைப்பில் இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளது.
மேலும், இந்தப் பதிவு சர்ச்சையான நிலையில், வெங்கடேஷ் ஆறுமுகம் தனது முகநூல் பக்கத்தில் இருந்து அந்தப் பதிவை நீக்கியுள்ளார்.
மேலும் படிக்க : #நாசா_வியந்தது என வைரலாகும் மீனாட்சி அம்மன் கோவில் பதிவு|உண்மை என்ன ?
இதேபோல், 2019ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் நாசா கண்காணித்த பொழுது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் என நையாண்டிப் பதிவு வைரலானது. அந்த பதிவையும் வெங்கடேஷ் ஆறுமுகமே பதிவிட்டு இருந்தார்.
முடிவு:
நம் தேடலில், மலேசியா நாட்டின் அருங்காட்சியத்தில் உள்ள சோழ இளவரசி குந்தவையின் அரிய புகைப்படம் என வைரலாகும் பதிவு தவறானது. அது நகைச்சுவை நடிகர் நையாண்டியாகப் பதிவிட்ட புகைப்படத்தை உண்மை என நம்பி பலர் பதிவிட்டு வருகின்றனர்.