கிறிஸ்தவ துண்டு பிரசுரம் கொடுப்பதாக கூறி வீடுகளில் கொள்ளை என ஃபேஸ்புக் வதந்தி !

பரவிய செய்தி
காவல்துறை எச்சரிக்கை அவசியம் அனைவருக்கும் பகிரவும்.
” யாரவது உங்கள் தெருவில், உங்கள் வீட்டின் அருகில் வந்து இயேசுவின் சுவிசேஷம் என்ற பெயரில் நற்செய்தி வழங்குகிறோம் என்று காகிதங்களை நீட்டினாள் கை நீட்டி வாங்கிவிடாதீர்கள். அந்த காகிதத்தில் விஷக்கிருமிகள் அடங்கிய ரசாயனங்கள் தடவப்பட்டிருக்கும். அதை நீங்கள் தொடும் பொழுது உங்களுக்கு மயக்கம் மற்றும் புத்தி செயலிழப்பு நடைபெறும். இதைப் பயன்படுத்தி வீடு பூந்து கொள்ளையடிக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் இது சம்பந்தமாகப் பல புகார்கள் குவிந்து கொண்டிருக்கின்றது. அனைவரும் எச்சரிக்கையாக…
ஏஜிஎஸ் மற்றும் இவாஞ்சலிஸ்ட் கிறிஸ்தவ அமைப்புகள் இந்த சதிகளுக்குக் காரணம். உடனடியாக வீட்டில் இருப்பவர்களுக்கும் அக்கம் பக்கத்தார் இதை பகிருங்கள். கிறிஸ்துவ மிஷனரிகளின் கொள்ளை, கொலை மற்றும் கற்பழிப்பு செயல்களை உலகறிய செய்யுங்கள் ” .
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் சைக்கிள் ரிக்ஸா போன்ற வாகனங்களில் சாய் பாபா உள்ளிட்ட இந்து கடவுள்களின் படங்கள், சிலைகளை வைத்து தெருக்களில் வலம் வருபவர்கள் திருநீறில் மயக்க மருந்துகளை கொடுத்து வீட்டில் இருந்து கொள்ளை அடிப்பதாகவும், சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் 5 வீடுகளில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்து இருப்பதை தமிழ்நாடு காவல்துறை எச்சரித்து உள்ளதாக ஃபார்வர்டு செய்தியானது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியது.
மேலும் படிக்க : சாய்பாபா பாட்டு பாடி வருபவர்கள் வீடுகளில் கொள்ளை அடிப்பதாக வதந்தி !
இது தொடர்பாக சென்னை காவல் அதிகாரியை தொடர்பு கொண்ட பொழுது, பரவிய செய்திகளில் உண்மை இல்லை என நமக்கு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், மீண்டும் அதே ஃபார்வர்டு செய்தி பாணியில் கிறிஸ்தவ அமைப்புகள் துண்டு பிரசுரங்களில் விஷக்கிருமிகளை தடவி வீடுகளில் கொள்ளையடிப்பதாக ஓர் எச்சரிக்கை செய்தி முகநூலில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த பதிவில் குறிப்பிட்டது குறித்து செய்திகளில், காவல்துறை தரப்பில் எந்தவொரு எச்சரிக்கையும் வெளியாகவில்லை. மத அடிப்படைவாதம் கொண்டவர்கள் ஒருவர் மதத்தை ஒருவர் மாற்றி மாற்றி இழிவாக பேசுவதாக நினைத்து மக்கள் மத்தியில் வீடுகளில் நிகழும் கொள்ளை சம்பவம் தொடர்பாக அச்சத்தை உருவாக்கி வருகின்றனர்.
வதந்திகளை பரப்புவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தும் மீண்டும் மீண்டும் வதந்திகளை பரவிக் கொண்டே இருக்கின்றனர். சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மத சார்ந்த வெறுப்புணர்வு உருவாகி அது தொடர்பாக பதிவுகள் அதிகரித்து வருவதால் மக்கள் ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மையை அறிந்த பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.