கிறிஸ்தவப் பள்ளியில் மாணவிகளின் தலைமுடியை வெட்டினார்களா ?| வைரலாகும் வீடியோ.

பரவிய செய்தி

கிறிஸ்தவம் எதை கற்றுத்தருகிறது பாருங்கள். கிறிஸ்துவ பள்ளி எவ்வளவு கேவலமாக போகிறது என பாருங்கள். நவீன காலத்திற்கு மாற்றுகிறார்களாம். பூ வைக்க கூடாது, பொட்டு வைக்க கூடாது, இப்போது கூந்தலும் கூடாது. பள்ளி மாணவிகளின் கூந்தலை அறுக்கும் பள்ளிக்கூடம். தாலி அறுக்கும் கூட்டம் இப்போது பெண்ணின் கூந்தலையும் அறுக்க தொடங்கி விட்டது கொடுமை.

பள்ளிக்கூடம் நடத்தறானுகளா,
சலூன் கடை நடத்துறானுகளா.!!

மதிப்பீடு

விளக்கம்

கிறிஸ்தவ பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் தலைமுடியை வெட்டி விடுவதாக வீடியோ காட்சி ஒன்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேடையில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் நிற்க அவருக்கு சிறிது அருகில் மாணவியின் தலைமுடியை வெட்டி மாணவியின் கையிலேயே தருகின்றனர்.

Advertisement

Facebook link | Archived link  

ரேணு பெரியசாமி என்பவர் தமிழக இந்துக்கள் என்ற முகநூல் குழுவில் பகிர்ந்த வீடியோ 700-க்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பரவும் வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளையும் பெற்று பரவுகிறது.

உண்மை என்ன ? 

சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ பள்ளியின் வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம். அந்த வீடியோவில், மாணவியின் தலைமுடியை வெட்டி எடுக்கும் பொழுது மேடையில் இருப்பவர்கள் மட்டுமின்றி மாணவியும் சிரித்த முகத்துடன் இருப்பதை காணலாம். மேலும், தலைமுடியை வெட்டிய பிறகு பலரும் கைத்தட்டி உற்சாகமூட்டுவதை கேளுங்கள்.

Advertisement

மேலும், அங்கு நடப்பது பள்ளியில் நிகழும் நிகழ்ச்சி போன்ற தோற்றத்தில் உள்ளது. வீடியோ, புகைப்படங்கள் எடுப்பதையும் வீடியோ காட்சியில் இடம்பெற்று இருக்கிறது. கூடுதலாக, கிறிஸ்தவ பள்ளியில் மாணவிகளின் தலைமுடியை வெட்டியதாக கூறும் பதிவுகளின் கம்மெண்ட்களில் பலரும் ” புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக தலைமுடியை அளிக்கின்றனர் ” என வீடியோ லிங்க் ஒன்றையும் பதிவிட்டு இருந்தனர்.

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி மனோரமா செய்தி சேனலில் ” Students donated hair to cancer patients in Vaikom ” என்ற தலைப்பில் வெளியான வீடியோ கிடைத்தது. எனினும், இது நடந்தது 2016-ம் ஆண்டில், பரவி வரும் வீடியோ சமீபத்தில் நிகழ்ந்தது போன்று உள்ளது. மேடையில் உள்ள நிகழ்ச்சிக்கான பேனரில் ” kanivu 2019 ” என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. எனவே, இது சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியே.

எனவே, தொடர்ந்து வீடியோ குறித்து தேடி பார்த்தோம். முகநூலில் வெளியான வீடியோவின் கீழே TikTok @aneenag என்ற வார்த்தைகள் இடம்பெற்று இருந்தது. @aneenag என்ற டிக்டாக் ஐடி-யை வைத்து தேடிய பொழுது நான்கு நாட்களுக்கு முன்பாக பரவும் வீடியோவின் உண்மையான பதிவு பதிவிடப்பட்டு இருக்கிறது. இந்த டிக்டாக் ஐடி-க்கு சொந்தமான பெண் கேரளாவைச் சேர்ந்தவர்.

ஆனால், அதில் குறிப்பிட்டு இருந்த வார்த்தைகளே வேறு, ” என்னுடைய பள்ளியைச் 39 மாணவிகள் தங்களின் தலைமுடியை புற்றுநோயாளிகளுக்கு தானமாக வழங்கி உள்ளனர் ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடியை தானமாக வழங்குவதை பள்ளி, கல்லூரிகளில் ஒரு நிகழ்ச்சியாகவே நடத்தப்படுகிறது. சமீபத்தில் கேரளாவில் பெண் காவல் அதிகாரி ஒருவர் தன் தலைமுடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கிய செய்தி பெரிதாய் பேசப்பட்டது.

ஏன் தமிழகத்தில் கூட தலைமுடியை தானமாக வழங்கும் சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன. 2015-ல் கோயம்புத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்ய தங்களின் தலைமுடியை தானமாக கொடுத்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம்முடைய ஆய்வில், கிறிஸ்தவ பள்ளியில் மாணவிகளின் தலைமுடியை வெட்டி விடுவதாக கூறும் வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்ட நபரை கண்டறிந்தோம். அதில் இருந்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பள்ளி மாணவிகள் தங்களின் தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சியை தவறாக திரித்து மத சார்ந்த வன்மத்தை உருவாக்கி வதந்தியை பரப்பி உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

எனினும், பரவும் வீடியோ எங்கு நிகழ்ந்தது என்பது உள்ளிட்ட பள்ளியின் விவரங்கள் நமக்கு கிடைக்கவில்லை.

கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவிகள் தங்களின் தலைமுடியை புற்றுநோயாளிகளுக்காக தானமாக வழங்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன. தனியார் அமைப்புகள், பள்ளிகள் என பலரும் இதனை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button