விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் மதவாத தீவிரவாத அமைப்புகள்: CIA அறிக்கை.

பரவிய செய்தி

விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள அமைப்புகள் ஆகியவை மதவாத தீவிரவாத அமைப்புகள் என அமெரிக்காவின் சி.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

அமெரிக்காவின் உளவுத் துறை அமைப்பான சி.ஐ.ஏ இந்தியாவில் உள்ள விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள அமைப்புகளை மதவாத தீவிரவாத அமைப்புகள் என வேர்ல்ட் பேக்ட்புக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விளக்கம்

அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ என்னும் மத்திய புலனாய்வு அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வேர்ல்ட் பேக்ட்புக் அறிக்கையை வெளியிடுகிறது. “ உலக உண்மை தகவல்நூல்” என்னும் இந்த அறிக்கை அமெரிக்க எம்பிக்கள் உலக உண்மைகளை அறிந்து கொள்ள உதவுவதற்காக அச்சிடப்படுகிறது.

பல நாடுகளைப் பற்றிய உண்மை அடங்கிய “ வேர்ல்ட் பேக்ட்புக் ” 1962 ஆம் ஆண்டில் இருந்து அச்சிடப்பட்டு இருந்தாலும் 1975-ம் ஆண்டில் இருந்து தான் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. சி.ஐ.ஏவின் வேர்ல்ட் பேக்ட்புக் 267 நாடுகளின் வரலாறு, அந்தந்த நாடுகளில் செயல்படும் அமைப்புகள், மத அமைப்புகள், மக்கள், அரசியல் அமைப்புகள், அரசுகள், கட்சிகள், பொருளாதாரம், எரிசக்தி, புவியியல், போக்குவரத்து, ராணுவம், தகவல்தொடர்பு போன்றவை தொடர்பான அனைத்து தகவல்களையும் கொண்டு இருக்கும்.

சமீபத்தில் சி.ஐ.ஏ வெளியிட்ட “ வேர்ல்ட் பேக்ட்புக் ” அறிக்கையில் இந்தியாவில் உள்ள விஸ்வ ஹிந்து பரிஷத்(VHP),பஜ்ரங் தள அமைப்புகளை மதவாத தீவிரவாத அமைப்புகள் என குறிப்பிட்டுள்ளது. இவ்விரு அமைப்புகளையும் மதவாத தீவிரவாத அமைப்புகள் என சி.ஐஏ தெரிவித்ததற்கு அந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவில் அரசியல் ரீதியாக பின்புலத்தில் இருந்து கொண்டு அரசுக்கு நெருக்கடி அளிக்கும், இருப்பினும் தேர்தலில் களம் இறங்கா அமைப்புகள் என வகைப்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தேசியவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளனர்.

இவை மட்டுமின்றி காஷ்மீரின் ஹூரியத் மாநாடுக் கட்சியை பிரிவினைவாத அமைப்பு என்றும், ஜாமியாத் உலேமா இ ஹிந்த் அமைப்பை மதரீதியான அமைப்பு என்று பட்டியலிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் சி.ஐ,ஏ அறிக்கையில் மதவாத தீவிரவாத அமைப்பு என வெளியிட்டதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பயங்கரவாதம் என்ற வார்த்தையை நீக்காவிட்டால் சி.ஐ.ஏவுக்கு எதிராக உலக அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்கள். மேலும், இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஜ்ரங் தள அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து பிஜேபியின் சம்வாத் பிரிவின் முன்னாள் தேசிய நடத்தாளர் கேம்ச்சந்த் ஷர்மா கூறுகையில், “ சி.ஐ.ஏவின் அறிக்கை தவறான செய்தி. அதன் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங் தள அமைப்புகளை மதவாத தீவிரவாத அமைப்புகள் என்று கூறுவதை முழுமையாக நிராகரிக்கிறோம். எங்களுக்கு தெரியும், அவர்கள் தேசியவாத அமைப்புகள் “ என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள அமைப்புகளை மதவாத தீவிரவாத அமைப்புகள் என்று அமெரிக்க உளவுத்துறை சி.ஐஏ தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button