ப.சிதம்பரம் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றாரா ?

பரவிய செய்தி
இந்திய ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மிஷினை ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த போது பாகிஸ்தானுக்கு விற்றது உண்மை தான். அதன்மூலமே கள்ளநோட்டு புழக்கம் இந்தியாவில் அதிகரித்தது – ரகுராம்ராஜன், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்.
மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தான் நாட்டிற்கு விற்றதாகவும், அதன் மூலமாக இந்தியாவில் கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்தது என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்ததாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதே குற்றச்சாட்டை ப.சிதம்பரம் புகைப்படத்துடன் முகநூலில் பகிர்ந்த மற்றொரு மீம் பதிவும் கிடைத்தது. அதில், ” இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தின் ஆயுட்காலம் முடிந்தமையால் அதை ஏலம்விட்டோம். பாகிஸ்தான் நாடு அதிக தொகை கொடுத்து எடுத்தது. இதில் தவறேதும் இல்லை. சட்டப்படி தான் செயல்பட்டுள்ளோம் – ப.சிதம்பரம். இதற்கு பேர் தேச துரோகமா ? இல்லையா ? ” இடம்பெற்று உள்ளது.
ப.சிதம்பரம் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தான் நாட்டிற்கு விற்று விட்டதாக கூறும் குற்றச்சாட்டுகள் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்களின் முகநூல் பக்கங்கள் மற்றும் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டில் பிஜேபி சிதலப்பாக்கம் மண்டலம் எனும் முகநூல் பக்கத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு ஏலம் விட்டது தொடர்பாக நிரூபர் கேள்வி கேட்டதாக கேள்வி, பதில்களை பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவில் புகைப்படம் மட்டுமே இடம்பெற்று இருந்தது, பேட்டி அளித்த வீடியோவோ அல்லது செய்தி லிங்கோ அளிக்கவில்லை.
உண்மை என்ன ?
முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரத்தை ப.சிதம்பரம் பாகிஸ்தான் நாட்டிற்கு விற்றார் என ரகுராம்ராஜன் கூறியதாக பரவும் தகவலுக்கும், இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரத்தை சட்டப்படி அரசு ஏலம் விட்டதால் அதை அதிக விலைக்கு பாகிஸ்தான் வாங்கியது என ப.சிதம்பரம் கூறியதாக பரவும் தகவலுக்கும் ஆதாரங்கள் என்று ஏதும் அளிக்கவில்லை. இது தொடர்பாக தேடினால் அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது செய்திகளோ ஏதும் கிடைக்கவில்லை.
ப.சிதம்பரம் மற்றும் கள்ளப் பணம் தொடர்பாக செய்திகளை ஆராய்ந்த பொழுது, பாஜக எம்பி சுப்ரமணிய சுவாமி இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கள்ள பணத்திற்கு ப.சிதம்பரமே காரணம் என குற்றம்சாட்டியது 2016-ல் நவம்பர் மாதம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
” லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நிறுவனத்திடம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் ஒப்பந்தத்தை ப.சிதம்பரம் அளித்துள்ளார். அதே நிறுவனம் தான் பாகிஸ்தான் நாட்டிற்கும் பணத்தினை அச்சடிக்கிறது. ஆக, இதுவே இந்திய ரூபாய் தாள்களை பாகிஸ்தானால் எளிதாக பெறச் செய்தது. பாகிஸ்தானில் இருந்து வரும் கள்ள பணத்தினை அடிப்படையாக வைத்தே அனைத்து காஷ்மீர் கிளர்ச்சியாளர்களும் இயங்குவதாக ” சுப்ரமணிய சுவாமி கூறி இருந்தார். அந்த செய்தியில் ரகுராம் ராஜன் குற்றச்சாட்டோ அல்லது ப.சிதம்பரம் பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை ஏலம் விட்டதாக எந்தவொரு தகவலும் இல்லை.
2019 ஜனவரியில் பிரதமர் மோடி அரசை விமர்சித்து வந்த முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் ராகுல் காந்தியின் ஆலோசகராக மாறினார். ப.சிதம்பரம் ஏற்பாட்டின் பேரில் இருவரும் அடிக்கடி சந்திக்கும் ரகசியம் அம்பலம் என பாஜக ஆதரவு இணையதளமான கதிர் நியூஸ் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டு இருந்தது.
வலதுசாரி ஆதரவாளர்களே ரகுராம்ராஜன் ராகுல்காந்திக்கு ஆலோசராக மாறியதாகவும் கூறிகிறார்கள், அவர்களே ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டை ரகுராம்ராஜன் வைத்ததாகவும் கூறுகிறார்கள். ரகசிய ஆலோசகராக இருக்கும் ரகுராம்ராஜன் அவர்களுக்கு ப.சிதம்பரத்திற்கு எதிராகவே பேசுகிறார் என லாஜிக் இல்லாமல் பொய்களை பரப்புகிறார்கள்.
இப்படி பரப்பி வரும் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் என ஏதுமில்லை என அறிந்தும் பரப்பி வருகிறார்கள் என்பதே எதார்த்தம். இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரத்தை ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு விற்றதாக ரகுராம்ராஜன் கூறினார் என பரப்பும் தகவலுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. தவறான தகவல்களை பகிர வேண்டாம்.