ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்திற்கு இயக்குனர் தங்கர் பச்சான் ஆதரவு தெரிவித்தாரா ?

பரவிய செய்தி
ஒளிப்பதிவு திருத்த சட்டம் – தங்கர்பச்சான் ஆதரவு. ஒளிப்பதிவு திருத்த சட்டம் வரவேற்கத்தக்கது: மத்தியரசு எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க ஒரு கூட்டம் இங்கே உள்ளது: அதை நாம் பொருட்படுத்த தேவையில்லை.
மதிப்பீடு
விளக்கம்
பாஜக அரசு கொண்டு வரும் ஒளிப்பதிவு திருத்த சட்டத்திற்கு இயக்குனர் தங்கர்பச்சான் ஆதரவு தெரிவித்து உள்ளதாக சன் நியூஸ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
தங்கர் பச்சான் ஒளிப்பதிவு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கருத்துக் கூறியதாக சமூக வலைதள பக்கங்களில் பாஜக ஆதரவாளர்கள் கூட பதிவிட்டு வருவதை பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
ஒளிப்பதிவு திருத்த சட்டத்திற்கு இயக்குனர் தங்கர்பச்சான் ஆதரவு தெரிவித்ததாக பரப்பப்படும் நியூஸ் கார்டு குறித்து சன் நியூஸ் சேனலின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், ஒளிப்பதிவு திருத்த சட்டத்திற்கு தங்கர்பச்சான் எதிர்ப்பு தெரிவித்த செய்தியே வெளியாகி இருந்தது.
செய்தியில், ” ஒளிப்பதிவு திருத்த சட்டம் – தங்கர்பச்சான் எதிர்ப்பு. என் படத்தை டெல்லியில் இருந்து ஒரு குழு நினைத்தால் முடக்கலாம் என நினைப்பது எவ்வளவு அபாயகரமானது ? தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை அழித்தது போதாதா ? சினிமாவை ஒழிப்பது தான் பாஜக அரசின் நோக்கமா ? என தங்கர் பச்சான் கேள்வி எழுப்பியதாக இடம்பெற்று இருக்கிறது.
இயக்குனர் தங்கர்பச்சான் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற கோரிக்கை வைத்து பேசி இருக்கிறார்.
மேலும் படிக்க : ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என சூர்யா கூறினாரா ?
இதற்கு முன்பாக, ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோருக்கு எதிராக போலிச் செய்திகளை பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஒளிப்பதிவு திருத்த மசோதா: இயக்குனர் சீனு ராமசாமிக்கும் ஒரு போலி செய்தி !
முடிவு :
நம் தேடலில், ஒளிப்பதிவு திருத்த சட்டத்திற்கு இயக்குனர் தங்கர் பச்சான் ஆதரவு தெரிவித்ததாக பரப்பப்படும் சன் நியூஸ் சேனலின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி. இயக்குனர் தங்கர் பச்சான் சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என எதிரான கருத்தையே தெரிவித்து இருக்கிறார்.