“சிட்டி ஸ்கேன்” என எழுதியது தமிழக மருத்துவர் இல்லை| நீட் ஆதரவாக தமிழக மருத்துவர்களை இழிவுப்படுத்தும் பதிவு!

பரவிய செய்தி
இதுக்கு தான் டுமிலன்ஸ்களா. படிங்க ஒழுங்கானு சொல்றது. நீட் தேர்வு ஏன் தேவைனு சொல்றோம் இப்போ தெரியுதா ?
மதிப்பீடு
விளக்கம்
நர்சிங் ஹோம் ஒன்றில் வழங்கப்பட்ட ப்ரிஸ்க்ரிப்சனில் சிடி ஸ்கேன் என்பதற்கு பதிலாக சிட்டி ஸ்கேன் என எழுதப்பட்டு உள்ள புகைப்படத்தை வைத்து நீட் தேர்வு ஏன் முக்கியம் என்று சொல்கிறோம் புரிகிறதா என்றும், குறிப்பாக தமிழர்களை விமர்சித்து நீட் ஆதரவானப் பதிவை பகிர்ந்து வருகின்றனர்.
2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி சமீனா மகப்பேறு மற்றும் நர்சிங் ஹோமில் வழங்கப்பட்ட ப்ரிஸ்க்ரிப்சனில் ” City Scan of Brain ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வைத்தே தமிழக மருத்துவர்களின் திறனை கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனால், அந்த நர்சிங் ஹோம் அமைந்து இருப்பது தமிழகம் இல்லை, ஹைதராபாத்.
மருத்துவமனை குறித்து தேடிய பொழுது, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் தளபகட்டா பகுதியில் அமைந்து இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. எனினும், இதை எழுதியது மருத்துவரா, உதவியாளரா அல்லது வேறு யாரா என உறுதியாகத் தெரியவில்லை.
நீட் தேர்விற்கு ஆதரவாக பதிவிடுவதாக நினைத்துக் கொண்டு தெலங்கானா மாநிலத்தில் உள்ள நர்சிங் ஹோமில் வழங்கப்பட்ட ப்ரிஸ்க்ரிப்சன் வைத்துக் கொண்டு தமிழக மருத்துவர்களை இழிவுப்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவிலேயே குறைந்த அளவிலான மக்களுக்கு (தோராயமாக 250 பேருக்கு 1 மருத்துவர்) அதிக மருத்துவர்களை கொண்ட மாநிலமாக விளங்குவது தமிழகமே. இந்த சாதனை நீட் தேர்வு வருவதற்கு முன்பே நிகழ்த்தி காட்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.