போலீசுடன் சண்டையிடுபவர் வேளச்சேரி எம்எல்ஏ வாகை சந்திரசேகரா ?

பரவிய செய்தி
வேளச்சேரி MLA வாகை சந்திரசேகர் கொரானா பாதுகாப்பு காவலர்களிடம் கடமை கண்ணியம் கட்டுபாட்டு முறையில் பயணித்த போது,
மதிப்பீடு
விளக்கம்
சுங்கச்சாவடி பகுதியில் போலீசுக்கும், காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகாத வார்த்தையில் திட்டியதோடு காவலரை அடிக்கவும் சென்ற காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் இருப்பது வேளச்சேரி திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் என Erachakulam Kaliyappan முகநூல் பக்கத்தில் வெளியான பதிவு 11 ஆயிரத்திற்கும் மேல் ஷேர் ஆகி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையை பெற்று வருகிறது.
திரைப்பட நடிகரும், திமுகவின் வேளச்சேரி தொகுதி எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகர் உடைய புகைப்படத்தை கீழே காண்பித்து உள்ளோம். வீடியோவில் இருப்பது வாகை சந்திரசேகர் இல்லை என்பதை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது.
போலீசுடன் தகாத வார்த்தைகளை பேசி, சண்டையிடும் நபரின் வைரல் வீடியோ குறித்து தேடிய பொழுது, ” போலீசுடன் மல்லுக்கு நின்ற முன்னாள் எம்பி ” என வைரல் வீடியோ குறித்த செய்தி தமிழ் சமயம் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.அர்ஜுனன் சுங்கச்சாவடிக்கு காரில் வந்த போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார். இதனால் ஆவேசமடைந்த கே.அர்ஜுனன் காவலர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். உதவி ஆய்வாளரும் அவரை திட்டியுள்ளார். இதனால் கோபப்பட்ட கே.அர்ஜுனன் அங்கிருந்த உதவி ஆய்வாளரை தாக்க முயன்றுள்ளார். பதிலுக்கு உதவி ஆய்வாளரும் அவரைத் தள்ளி விட்டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்தவர் உதவி ஆய்வாளரை எட்டி உதைத்துள்ளார் என வெளியாகி இருக்கிறது.
கே.அர்ஜுனன் 1980-84 வரை தருமபுரி திமுக எம்பியாக பதவி வகித்தார். பின்னர் அதிமுகவில் சேர்ந்து சேலம் மாவட்ட செயலாளர் ஆகி வீரபாண்டி எம்எல்ஏ ஆக இருந்தவர். 2017-ல் ஜெ.தீபா அணியில் இணைந்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது. தற்போது எந்த கட்சியில் இருக்கிறார் எனத் தெரியவில்லை.
முடிவு :
நம்முடைய தேடலில், வேளச்சேரி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் கொரானா பாதுகாப்பு காவலர்களிடம் தகராறு செய்ததாக பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் இருப்பவர் முன்னாள் எம்பி கே.அர்ஜுனன் என அறிய முடிந்தது.