This article is from May 11, 2020

ஜனாதிபதி விருது பட்டியலில் தமிழ் புறக்கணிப்பா ?| ஒவ்வொரு ஆண்டும் எழும் சர்ச்சை.

பரவிய செய்தி

இந்திய துணைக்கண்டத்தில் செம்மொழி தமிழை தவிர்த்து பிற மொழிகளுக்கு விருது வழங்கும் கேடுகெட்ட இந்திய அரசே! அதை தமிழிலேயே வெளியிடும் துணிச்சலை உனக்கு எவன் கொடுத்தது?

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் செம்மொழியில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. 2020 மே 9-ம் தேதி ” ஜனாதிபதி விருதுகள் 2020-க்கான நாமினேஷன் அழைப்பு ” என்ற தலைப்பில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வெளியான பத்திரிகை விளம்பரத்தில் தமிழ் மொழி இல்லை, தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக கீழ்காணும் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், தமிழை புறக்கணித்து அதை தமிழில் வெளியிடுவதாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

செம்மொழி விருது பட்டியலில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக ஒவ்வொரு ஆண்டும் குரல்கள் எழுந்து கொண்டே இருக்கிறது. கடந்த 2019-ல் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக வெளியிட்ட செம்மொழி விருதுகள் தொடர்பான விளம்பரத்திலும் தமிழ் மொழி இல்லை என ஒன்இந்தியா தமிழ் உள்ளிட்ட செய்தி தளங்களில் வெளியாகியது.

Twitter link | archive link 

இதற்கு முன்பாக 2018-ல் செம்மொழிகளுக்கான ஜனாதிபதி விருதுகள் பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்த போது அதை மறுத்து தமிழக அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. ” செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ” தன்னிச்சையாக செயல்படுகிறது. தமிழ் மொழிக்கென தொல்காப்பியர், குறள் பீடம் மற்றும் இளம் அறிஞர்கள் விருதுகள் உள்ளிட்ட ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாமினேஷனுக்கான சுற்றறிக்கை தன்னிச்சையாக செயல்படாத பிற செம்மொழிகளுக்கு மட்டும் எனத் தெரிவித்து இருந்தனர்.

2005-2006 முதல் 2015-2016 வரையில் மொத்தம் 66 விருதுகள் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக 2018-ல் வெளியான செய்தியில் இடம்பெற்று உள்ளது.  2017-ல் Press information bureau வெளியிட்ட செய்தியில் செம்மொழி தமிழுக்கான ஜனாதிபதி விருதுகள் வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதேபோல், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மொழிக்கு வழங்கப்படும் விருதுகள் பற்றியும் இடம்பெற்று இருக்கிறது.

2019-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட சுற்றறிக்கையில், செம்மொழி தமிழுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி விருதுக்கான பரிந்துரைக்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், தமிழ் மொழிக்கென மொத்தம் 8 விருதுகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இணையதளத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் விருது குறித்த அறிவிப்புகள் உள்ளன.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் படி, 1958-ல் இருந்து சமஸ்கிருதம், அரபிக் மற்றும் பெர்ஷியன் அறிஞர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்குவது தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 1996-ல் பாலி, ப்ரக்ரிட் உள்ளிட்ட மொழிகளுக்கும் நீட்டிக்கப்பட்டது.

செம்மொழி தமிழுக்கான ஜனாதிபதி விருதுகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கூறும் தகவல் தவறானது. தன்னிச்சையாக செயல்படாத மொழிகளுக்கு மட்டுமே விருது தொடர்பான விளம்பரம் வெளியிட்டு உள்ளனர். செம்மொழி தமிழுக்கென தொல்காப்பியர் விருது, குறள் பீடம், இளம் அறிஞர்கள் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader