ஹெலிகாப்டரில் பேப்பர் படிக்கும் குமாரசாமி ? பிஸ்கட்டை தூக்கி வீசும் அவரது சகோதரர்..!

பரவிய செய்தி
கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொள்ள சென்ற கர்நாடகா முதல்வர் குமாரசாமி பாதிப்பை ஆய்வு செய்யாமல் பேப்பர் படித்துக் கொண்டு வருகிறார். இது தான் ஆய்வு செய்யும் லட்சணம்..!! நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்களை தூக்கி வீசும் கர்நாடகா அமைச்சர்.
மதிப்பீடு
சுருக்கம்
முதல்வர் குமாரசாமி மழையால் பாதித்த இடங்களை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவில் இருக்கும் குறிப்பிட்ட காட்சியை மட்டும் எடுத்து தவறான தகவல்களை பரப்பியுள்ளனர்.
பிஸ்கட் பாக்கெட்களை வீசியது கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சரும், முதல்வரின் சகோதரரான ரேவண்ணா ஆவார்.
விளக்கம்
கேரளாவில் கனமழை வெள்ளத்தால் மக்கள் பாதித்தது போன்று கர்நாடகாவிலும் கனமழை பொழிந்து வெள்ளம் உருவாகி 8 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் அதிகம் பாதித்த குடகு மாவட்ட பகுதிகளை கர்நாடகா முதல்வர் குமாரசாமி இரண்டு ஆய்வுகளை ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்டார்.
அதில், ஆய்வை மேற்கொள்ள சென்ற முதல்வர் அலட்சியமாக பேப்பர் படித்துக் கொண்டு செல்கிறார். இதுதான் ஆய்வு செய்யும் விதமா என பிஜேபி எம்எல்ஏக்கள், முன்னாள் தலைவர்கள் உள்பட பலரும் குமாரசாமி மீது குற்றம்சாட்டினர்.
இணையத்தில் அதிகம் வைரலாகியவை முதல்வர் குமாரசாமி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட இரண்டாவது ஆய்வு ஆகும். அதில் பல வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒரேயொரு குறிப்பிட்ட காட்சியை மட்டும் எடுத்துக் கொண்டு தவறான தகவல்களை பரப்பியுள்ளனர் சிலர்.
Deccan herald தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி குடகு பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்த வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
அதேபோன்று mirror now பத்திரிகையாளர் atul Chaturvedi மற்றொரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.
மடிகேரி பகுதிக்கு செல்ல இன்னும் 4 மைல்கள் இருப்பதாக வீடியோவில் பேசும் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. ஹெலிகாப்டர் பயணத்தில் செய்தித்தாள் வாசித்த அந்த பகுதியை மட்டும் எடுத்து தவறான தகவல் உடன் இணையத்தில் வைரல் ஆக்கி உள்ளனர்.
கர்நாடகா முதல்வர் வெள்ள ஆய்விற்கு செல்லும் பயணத்தில் செய்தித்தாளை வாசித்து உள்ளார். குறிப்பிட்ட பதிவை மட்டும் வைத்து தவறான கருத்துகளை இணைத்து அரசியல் செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது. சமூக வலைத்தளத்தில் பரவும் செய்திகளை உடனடியாக உண்மை என நினைப்பது சரியல்ல…!!
பிஸ்கட்டை தூக்கி வீசும் குமாரசாமியின் சகோதரர் :
கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரா என்னும் பகுதியில் இருக்கும் நிவாரண முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் உடைக்காகவும், உணவிற்காகவும் காத்திருந்தனர். அங்கு சென்ற கர்நாடக மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சரும், முதல்வர் குமாரசாமியின் சகோதரருமான HD ரேவண்ணா தனக்கு முன்னால் இருக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பிஸ்கட் பாக்கெட்களை தூக்கி விசி உள்ளார்.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களை மதிக்காமல் பிஸ்கட் பாக்கெட்களை தூக்கி வீசுவது தவறான செயல் என்று அரசியல் கட்சியினரும், பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த, அமைச்சர் ரேவண்ணா. ” நான் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு பிஸ்கட் பாக்கெட்களை தூக்கி வீசவில்லை. என்னால் அவர்களிடம் சென்று கொடுக்க முடியவில்லை, நான் யாரையும் அவமானப்படுத்தவில்லை என்று தெரிவித்து இருந்தார் ”
அதேபோல் முதல்வர் குமாரசாமி, ரேவண்ணாவால் கூட்டத்தில் மக்களுக்கு பிஸ்கட் வழங்க சிரமமாக இருந்துள்ளது, அவர் யாரையும் அவமானப்படுத்தவில்லை என்று தனது சகோதரருக்கு சாதகமாகவே பேசியுள்ளார். எனினும், அவரின் செயல் பார்ப்பதற்கு மக்களை அவமானப்படுத்தியது போன்றே உள்ளது. மக்களை மதிப்பதே ஆட்சியாளர்களின் கடமை என்பதை உணர வேண்டும்.