‘வேறுபாடு இல்லாமல் கற்பழிப்பு’ என முதலமைச்சர் பேசியதாகத் தவறானச் செய்தி வெளியிட்ட ஜெயா ப்ளஸ் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் அமைந்துள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவிகள் மத்தியில் பேசும் போது ‘வேறுபாடு இல்லாமல் கற்பிக்கப்பட்ட’ என்பதற்குப் பதிலாக ‘கற்பழிக்கப்பட்ட’ எனக் கூறியதாக 23 வினாடிகள் வீடியோவை ‘ஜெயா ப்ளஸ்’ செய்தி சேனல் பதிவிட்டுள்ளது.
No Comments 😳 pic.twitter.com/13F1OnWFkq
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) February 8, 2023
அந்த வீடியோவினை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் முதற்கொண்டு பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
"வேறுபாடு இல்லாமல் கற்பழிப்பு"
– ஸ்டாலின் உளறல் பேச்சு…🤔 pic.twitter.com/RPjq6Hnx0B— Umashankar Lakshmipathy (@umashankartnbjp) February 9, 2023
உண்மை என்ன ?
ஜெயா ப்ளஸ் பதிவிட்டுள்ள வீடியோவில் ‘08.02.2023’ என்ற தேதியும், ‘திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம்’ என்ற இடமும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அன்றைய தேதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ‘புதுமைப் பெண் திட்டத்தின்’ இரண்டாம் கட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
அந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசிய முழு வீடியோ ‘தந்தி டிவி’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், 7வது நிமிடத்திற்கு மேல் கல்வியின் சிறப்பு குறித்து திருவள்ளுவர் கூறியதையும், பெண் கல்வி பற்றி பாரதிதாசன் கூறியதையும் குறிப்பிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசியது, “மத ரீதியாக, வர்த்தக ரீதியாக, சாதி ரீதியாக, இன ரீதியாக, பால் ரீதியாக வேறுபாடுகளும் தீண்டாமைகளும் கற்பறிக்கப்பட்டிருந்த… கற்பிக்கப்பட்டிருந்த இந்த நிலத்திலே, அனைவரும் சமம், அனைவருக்கும் சம வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம் தான் திராவிட இயக்கம்” எனக் கூறுகிறார்.
கற்பிக்கப்பட்டு என்பதற்குப் பதிலாக கற்பறிக்கப்பட்டு எனத் தவறுதலாகக் கூறி இருக்கிறார். அதனையும் உடனடியாக சரிசெய்தும் பேசியுள்ளார். ஆனால், அவர் கற்பறிக்கப்பட்டு எனச் சொன்னதைக் கற்பழிக்கப்பட்டு எனக் கூறியதாக ஜெயா ப்ளஸ் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியது இந்து தமிழ் திசை இணையதளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. அச்செய்தியிலும் “வேறுபாடுகளும் தீண்டாமைகளும் கற்பிக்கப்பட்டிருந்த இந்த நிலத்தில்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டம் :
இது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்’ கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முதல் கட்டத்தினை 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் சென்னையில் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே அத்திட்டத்தின் இரண்டாம் கட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் சுமார் 2,20,000 மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், முதலமைச்சர் ஸ்டாலின் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பேசும் போது கற்பழிக்கப்பட்டு எனப் பேசியதாக வெளியாகும் செய்தி உண்மை அல்ல. கற்பிக்கப்பட்டு என்பதற்குப் பதிலாக கற்பறிக்கப்பட்டு என்றே தவறுதலாகப் பேசி உள்ளார். அதனை உடனடியாக திருத்தி கற்பிக்கப்பட்டு என்றும் கூறியுள்ளதைக் காண முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.