முதல்வர் ஸ்டாலின் டீ குடித்த கடை நஷ்டத்தால் மூடியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை முதலாளி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீ குடித்த கடை நஷ்டத்தில் இயங்கியதை அடுத்து அக்கடை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக ABP நாடு நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிமுகவை சேர்ந்தவர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
அதில், “ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை முதலாளி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய நியூஸ் கார்டில் ‘14-Feb-2022’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை கொண்டு ABP நாடு அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் தேடினோம். அவர்களது பக்கத்தில் பரவக்கூடிய நியூஸ் கார்டு இல்லை.
மேற்கொண்டு, நியூஸ் கார்டில் உள்ள ஸ்டாலின் புகைப்படத்தை கூகுல் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். 2021, நவம்பர் மாதம் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டபோது அப்புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை இணையதளத்தில் இது தொடர்பான செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.11.2021) திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, ஆவடி மாநகராட்சி, மூர்த்தி நகர் பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்” என்றுள்ளது. அப்படத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களும் முதல்வருடன் இருப்பதை காண முடிகிறது.
#FakeNews Alert pic.twitter.com/2b5krhgwmH
— Manoj Prabakar S (@imanojprabakar) February 16, 2022
பரவக் கூடிய புகைப்படம் குறித்து மேற்கொண்டு தேடியதில் ABP நாடு முன்னாள் ஆசிரியர் மனோஜ் பிரபாகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பரவக்கூடிய செய்தி போலியானது என 2022, பிப்ரவரி 16ம் தேதி பதிவிட்டுள்ளார். அப்போலிச் செய்தியினைதான் தற்போது மீண்டும் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : கலைஞர் ஆட்சியில் அதிக லஞ்சம் வாங்கப்பட்டது என ஸ்டாலின் பேசியதாகப் பரவும் எடிட் செய்த வீடியோ!
இதே போல் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டினருக்குப் பொங்கல் தொகுப்பு கொடுத்ததாக பாஜகவினர் போலி செய்தி பரப்பினர் . அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டினருக்கு பொங்கல் தொகுப்பு கொடுத்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !
முடிவு :
நம் தேடலில், முதலமைச்சர் ஸ்டாலின் டீ குடித்த கடை நஷ்டத்தில் இயங்கியதால் மூடப்பட்டது எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.