கோவை கார் வெடிப்பு வழக்குப் பதிவு பற்றி அண்ணாமலை சொன்ன பொய் !

பரவிய செய்தி

கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் குறித்து கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ காவல் நிலையத்தில் தான் முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 6 கைதிகள் கொச்சி சிறையில் உள்ளனர். – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

மதிப்பீடு

விளக்கம்

அக்டோபர் 31ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் சாமி திரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பு வீடியோ தமிழ்நாடு பாஜக-வின் அதிகாரப்பூர்வமான பேஸ்புக் பக்கத்தில் உள்ளது. அவ்வீடியோவின் 14 நிமிடம் 30வது நிமிடத்திற்கு மேல் அவர் பேசுகையில், ” அக்டோபர் 23ம் தேதி கோயம்புத்தூரில் நடந்த கார் வெடிப்பு குறித்து கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ காவல் நிலையத்தில் தான் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் கொச்சி சிறையில் உள்ளனர் ” என கூறி இருந்தார்.

உண்மை என்ன ?

கோயம்புத்தூர் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் அக்டோபர் 23ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு காவல் துறையின் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு இந்த வழக்கினை அக்டோபர் 26ம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமைக்கு சென்னையில் உள்ள புரசைவாக்கத்தில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காவல் நிலைய அலுவலகம் அமைக்கப்பட்டது. அதனை காவல் நிலையமாக அறிவித்து 2022ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.

சென்னையில் உள்ள என்.ஐ.ஏ காவல் நிலையத்தில் கோயம்புத்தூரில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து வழக்கு பதியப்பட்டுள்ளது. இது குறித்து அக்டோபர் 27ம் தேதி தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள என்.ஐ.ஏ-வின் முதல் FIR பதிவு இந்த வழக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் எந்த சிறையில் இருக்கிறார்கள் என தேடினோம். முதலில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவம்பர் 8ம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. ஆறாவதாக கைது செய்யப்பட்ட நபரினை, நவம்பர் 10ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டத் 6 பேரும் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதே போன்று இதற்கு முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு உளவுத்துறையில் 60 சதவீதத்தினருக்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட மதத்தினரே(கிறிஸ்தவர்கள்) இருப்பதாக தவறான தகவல்களை பேசி இருந்தார். அது குறித்த உண்மை தன்மையினை கண்டறிந்து யூடர்ன் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க: உளவுத்துறையின் உயர் பதவிகளில் 60% மேல் கிறிஸ்தவர்கள் உள்ளதாக அண்ணாமலை பரப்பும் அவதூறு

முடிவு :

நம் தேடலில், கோயம்புத்தூர் கார் வெடிப்பு குறித்து கொச்சி என்.ஐ.ஏ அலுவலகத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 6 கைதிகளும் கொச்சி சிறையில் இருப்பதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது தவறான தகவல்.

சென்னையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திலேயே FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 கைதிகளும் கோயம்புத்தூர் சிறையில் நீதிமன்ற காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader