குன்னூர், ஊட்டி கல்லூரிகளில் முப்படை தளபதி இறப்பை கொண்டாடியதாக மத வதந்தி !

பரவிய செய்தி
குன்னூர் ஊட்டி ஒட்டிய பகுதிகளில் முஸ்லிம் ஆண்கள் ஹாஸ்டகளில் நமது ராணுவ தளபதி இறப்பை கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.
மதிப்பீடு
விளக்கம்
குன்னூர், ஊட்டி ஒட்டிய பகுதிகளில் முஸ்லீம் ஆண்கள் விடுதிகளில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் இறப்பை கொண்டாடி மகிழ்வதாக மலையாள மொழியில் வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் மலையாள செய்தி வீடியோ குறித்து தேடுகையில், 2021 டிசம்பர் 11-ம் தேதி கர்மா நியூஸ் எனும் மலையாள யூடியூப் சேனலில் வெளியான வீடியோவே வைரல் செய்யப்பட்டு வருகிறது.
வீடியோவில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்த பிறகு டிசம்பர் 9-ம் தேதி ஊட்டி, குன்னூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளின் விடுதிகளில் டிஜே பார்ட்டிகள் நடத்தப்பட்டது. கல்லூரிகளில் முஸ்லீம் நபர்களின் வாட்ஸ்அப் புகைப்படம் ஒரே மாதிரியான குறியீட்டுடன் இருந்தது என பின்னனியில் பேசப்பட்டு இருக்கிறது.
மேற்காணும் வீடியோவில் 8வது நிமிடத்தில் மாணவர் ஒருவருடன் பேசும் போது, “ஹாஸ்டல் இன்சார்ஜ் சோகோ ஏற்பாடு செய்த பார்ட்டி என்றும், சும்மா பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் ” மட்டுமே கூறி இருப்பார். எப்போது, எந்த கல்லூரி என எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. வீடியோவில் குறிப்பாக குனியமுத்தூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் டிஜே பார்ட்டி நடந்ததாக அடிக்கடி குறிப்பிட்டு இருப்பார்கள்.
இந்நிலையில், குனியமுத்தூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் ஒன்றான நேரு கல்வி குழுமம் தரப்பில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ குறித்து விளக்கத்தை அளித்து இருக்கிறது.
” கோயம்புத்தூர், டிசம்பர் 12, 2021 – எங்கள் நேரு கல்வி நிறுவனங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும், தனியார் ஊடகங்களிலும் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதுவும், இந்திய முப்படை தளபதி மரணத்தின் நிகழ்வில் எங்கள் மாணவர்கள் தவறாக சித்தரித்து பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது.
கல்லூரியில் முதலாம் ஆண்டு புது மாணவர்களுக்கு கல்லூரி விடுதியில் மாணவர்களால் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது இந்த துக்க நிகழ்வுக்கு முன்பே நடத்தப்பட்டு விட்டது. இதை தவறாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் எங்களது மாணவர்களின் நாட்டுப்பற்றையும், இந்திய முப்படை தளபதியின் மரணத்தையும் சம்பந்தப்படுத்தி விஷமிகள் தவறான பிரச்சாரம் செய்கிறார்கள், இதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
எங்களின் கல்லூரியின் நிறுவனர் ஓய்வுப்பெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரி ஆவார். மேலும், எங்கள் கல்லூரி பேராசிரியர்கள் அதிகாரிகள் 50 விழுக்காட்டிற்கும் மேல் இந்திய ராணுவம் விமானப்படை அல்லது கப்பற்படையை பணிபுரிந்தவர்கள்.
எங்கள் கல்லூரியில் நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், மாணவர்கள் சார்பாக நமது இந்திய முப்படை தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகளின் மறைவிற்கு இரங்கல் கூட்டம் மற்றும் மெளன அஞ்சலி செலுத்தினோம். அந்த புகைப்படத்தையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
இத்தவறான செய்தியை பரப்புபவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை காவல்துறை உதவியுடன் எடுக்கப்படும் ” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நேரு கல்வி குழுமத்தின் மக்கள் தொடர்பு இயக்குநர் முரளிதரன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” வைரல் வீடியோவில் இடம்பெற்ற மாணவர்கள் பார்ட்டி வீடியோ எங்கள் கல்லூரியில் எடுக்கப்பட்டது தான், ஆனால் முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்திற்கு பிறகு அல்ல. அதற்கு முன்பாகவே நடத்தப்பட்டது. அதை வைத்து முஸ்லீம், இந்து என வதந்தியைப் பரப்புவது வேதனையாக இருக்கிறது. முப்படை தளபதி இறப்பிற்கு கல்லூரி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இப்படி வதந்தி பரப்பியவர்கள் மீது காவல்துறை தரப்பில் புகார் அளிக்க உள்ளோம் ” எனத் தெரிவித்து இருந்தார்.
மலையாள யூடியூப் சேனலான கர்மா நியூஸ், ஊட்டி, குன்னூர் என பல இடங்களில் உள்ள மாணவர் விடுதியில் டிஜே பார்ட்டிகள் நடைபெற்றதாக ஒரேயொரு வீடியோவை காண்பித்து இருக்கிறார்கள். இந்த யூடியூப் சேனலில், கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மற்றும் பினராயி விஜயனுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
மலையாள யூடியூப் சேனலில் வெளியான வீடியோவை வைத்து அன்னபூரணி எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியான வைரல் பதிவை இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கம் பகிர்ந்து இருந்தது. ஆனால், அன்னபூரணி ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு பின்னர் நீக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வதந்தி மற்றும் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராணுவ வீரர்கள் இறப்பை கொண்டாடும் வகையில் மாணவர்கள் விடுதிகளில் டிஜே பார்ட்டிகள் நடைபெற்றதாக மதம் சார்ந்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், குன்னூர், ஊட்டி ஒட்டிய பகுதிகளில் முஸ்லீம் ஆண்கள் விடுதிகளில் முப்படை தளபதி இறப்பை கொண்டாடி மகிழ்ந்ததாக பரப்பப்படும் வீடியோ வதந்தியே. அந்த வீடியோ குறித்து குனியமுத்தூர் நேரு கல்லூரி தரப்பில் மறுப்பும், விளக்கமும் அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.