கோவை குனியமுத்தூர் சாலை எனப் பரவும் பெங்களூரில் விண்வெளி வீரர் உடையில் எடுக்கப்பட்ட வீடியோ !

பரவிய செய்தி
உலகமே வியந்து பாருங்க….. இது விண்வெளி அல்ல….. திராவிட மாடலில் சிதைந்த எங்கள் ஊர் சாலை….. குனியமுத்தூர், சுகுணாபுரம்.
மதிப்பீடு
விளக்கம்
கோவை மாவட்டம் குனியமுத்தூர், சுகுணாபுரம் பகுதியில் மோசமாக உள்ள சாலையை நிலவு போலச் சித்தரித்து, விண்வெளி உடையுடன் ஒருவரை நடக்க வைத்து நூதனமான முறையில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் இவ்வீடியோவை பரப்பி வருகின்றனர். மேலும் இது திமுக ஆட்சியில் நடந்தது என்றும் சமூக வலைத்தளங்களில் அதிமுகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.
உலகமே வியந்து பாருங்க….. 👇👇
இது விண்வெளி அல்ல…..
திராவிட மாடலில் சிதைந்த குனியமுத்தூர், சுகுணாபுரம். சாலை….. 🤣😆 pic.twitter.com/oyvnUURWwV
— Sureshkumar Trichy🇮🇳 (@suresadmk) July 27, 2023
உண்மை என்ன ?
குனியமுத்தூர், சுகுணாபுரம் பகுதியில் எடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘நியூஸ் நேஷன்’ என்னும் யூடியூப் பக்கத்தில் பரவக் கூடிய வீடியோவை 2019, செப்டம்பர் 3ம் தேதி பதிவிட்டுள்ளனர்.
அதன் தலைப்பில் ‘பெங்களூரில் விண்வெளி வீரராக உடை அணிந்த மனிதர்’ என்றுள்ளது. மேலும் அதன் நிலைத்தகவலில் பெங்களூரு துங்காநகர் மெயின் ரோடு குண்டும் குழியுமாக இருந்ததால் ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி தனது முந்தைய படைப்புகளைப் போலவே விழிப்புணர்வை ஏற்படுத்த விண்வெளி போன்று வீடியோ எடுத்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வீடியோவினை ‘பிபிசி’, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆகிய ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதிலும் இந்த வீடியோ பெங்களூரில் எடுக்கப்பட்டது என்றே கூறப்பட்டுள்ளது.
View this post on Instagram
மேற்கொண்டு ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி என்பவர் குறித்தும் தேடியதில், மோசமாக உள்ள சாலைகள் குறித்து நூதனமான முறையில் ஓவியங்கள் பல வரைந்துள்ளதைக் காண முடிந்தது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே போன்று பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பதிவு செய்துள்ளார்.
தற்போது பரவக் கூடிய வீடியோவினை பதிவிட்டு ‘ஹீரோ ஹல்லி கிராஸ் பஸ் ஸ்டாப்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவ்விடம் கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு அருகில் உள்ளது. இதனைத் தமிழ்நாடு எனத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில் குனியமுத்தூர் சாலை குறித்துத் தேடியதில் ‘இந்து தமிழ் திசை’ தளத்தில் வெளியான செய்தியும் கிடைத்தது. அதில், ‘3 கிமீ தூரத்துக்கு சிதிலமடைந்த குனியமுத்தூர் – கோவைப்புதூர் – பேரூர் சாலை: மூன்று ஆண்டுகளாக மக்கள் அவதி’ என்ற தலைப்பில் புகைப்படத்துடன் கடந்த மே மாதம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பரவக் கூடிய வீடியோவில் உள்ள சாலையும் குனியமுத்தூர் சாலையும் வேறு வேறு.
மேலும் படிக்க : திருவாரூர் கால்வாயில் காவிரி நீருடன் அடித்து செல்லப்படும் குப்பைகள் எனப் பரப்பப்படும் இந்தோனேசியா வீடியோ !
இதே போல் வெவ்வேறு நாடுகள் மற்றும் மாநிலத்தில் நடந்தவற்றைத் தமிழ்நாட்டில் நடந்தது எனத் தவறாகப் பரப்பப்பட்ட தகவல்கள் பற்றிய உண்மைத் தன்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : கோவை நகர பேருந்து நிலைய பெயர்ப் பலகையில் எழுத்துப் பிழை எனப் பரவும் எடிட் செய்த புகைப்படம் !
முடிவு :
நம் தேடலில், விண்வெளி வீரர் உடையில் ஒருவர் நடக்கும் வீடியோ கோவை குனியமுத்தூர் சாலை எனப் பரவும் வீடியோ பெங்களூரில் 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அதனைத் தமிழ்நாடு எனப் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.