கோவை நகர பேருந்து நிலைய பெயர்ப் பலகையில் எழுத்துப் பிழை எனப் பரவும் எடிட் செய்த புகைப்படம் !

பரவிய செய்தி
தமிழை வளர்த்த இலட்சணம் திமுக. நரகப் பேருந்து நிலையம்… ஐயோ ஆண்டவா தமிழைக் காப்பாத்து ..
மதிப்பீடு
விளக்கம்
கோவை மாநகராட்சி நகர பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் ‘நரக பேருந்து நிலையம்’ என எழுதப்பட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
தமிழை கொல்லும்…
திராவிட மாடல் ஆட்சி.. 😭😭😭😭😭 pic.twitter.com/dqPr6UwxQf
— அஹம் ப்ரம்மாஸ்மி அகோரி 🚩🚩🚩🇮🇳🔥🔥🔥 (@l6Uu2YIKmMzZujj) July 24, 2023
திராவிட மாடல் ஆட்சியின் உண்மையை உணர்த்தும் பேருந்து நிலையம்
நரக பேருந்து நிலையம் 🤔
உண்மை தானே 😀@Siripriya2012 pic.twitter.com/g5i4zPg0gQ
— செந்தூரான் (@e9NIslv0uktMwJz) July 25, 2023
உண்மை என்ன ?
கோவை மாநகராட்சி பேருந்து நிலையம் எனப் பரப்பப்படும் புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடுகையில், ‘தி இந்து’ இணையதளத்தில் 2014 மே மாதம் கோவை மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையம் தொடர்பாகச் செய்தி ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அச்செய்தியில் பரவக் கூடிய பேருந்து நிலையத்தின் படம் உள்ளது. அப்படத்தில் உள்ள பெயர்ப் பலகையில் ‘நகர பேருந்து நிலையம்’ என்றுள்ளது.
மேற்கொண்டு அப்படத்தைப் பற்றித் தேடியதில் ‘Bharat pedia’ என்னும் தளத்திலும் கோவை பேருந்து நிலைய படத்தினை காண முடிந்தது. அதிலும் ‘நகர பேருந்து நிலையம்’ என்றே உள்ளது.
‘இந்தியா டுடே’ தளத்தில் 2014ம் ஆண்டு வெளியான செய்தியில் அப்பேருந்து நிலையத்தின் பெயர்ப் பலகை தெரியும் வகையில் எடுக்கப்பட்ட வேறு புகைப்படம் கிடைத்தது. அதிலும் ‘நகர’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
இவற்றைக் கொண்டு பார்க்கையில் ‘நகர’ என இருப்பதை ‘நரக’ என்று எடிட் செய்து பரப்பி வருவதை உறுதி செய்ய முடிகிறது. ஆனால், அப்புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, யார் அதனை முதலில் பதிவிட்டது என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க : ராம் ஐயர் கடையில் அசைவ உணவு விற்பதாகப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !
இதேபோல் புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களை எடிட் செய்து பரப்பப்பட்ட போலி செய்திகளின் உண்மைத் தன்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : அண்ணாமலை வாழும் காமராஜரா ?.. GoBack AmitShah பதாகையை எடிட் செய்து பரப்பிய பாஜகவினர் !
முடிவு :
நம் தேடலில், கோவை மாநகராட்சி நகர பேருந்து நிலைய பெயர்ப் பலகையில் ‘நரக’ என்று தவறாக இருப்பதாகப் பரப்பப்படும் புகைப்படம் உண்மையானது அல்ல. படத்தில் உள்ள எழுத்துக்களை போலியாக எடிட் செய்து பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.