ஜெ ஆட்சியில் இருந்தே தடுப்பில்லா ஜோடி கழிப்பறை.. தமிழ்நாடும், உபியும் சொல்லும் ஒரே காரணம் !

பரவிய செய்தி

கோயம்புத்தூர், ராஜீவ் காந்தி நகரில் ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்தும் வகையில் கதவுகள் கூட இல்லாமல் கட்டப்பட்டுள்ள கழிவறை எனப் பரவும் செய்தி.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஒரு கழிவறையை ஒரே நேரத்தில் இரண்டு பேர் பயன்படுத்தும் வகையில் கதவுகள் கூட இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறை கோவை, ராஜீவ் காந்தி நகரில் கட்டப்பட்டுள்ளதாக புகைப்படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் பரவி வருகிறது. இப்புகைப்படத்துடன்  திமுகவின் ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்றும் குறிப்பிட்டுப் பரப்பப்பட்டு வருகிறது. 

உண்மை என்ன ?

இந்த கழிவறை தொடர்பான வீடியோவை பார்க்கும் போது, இக்கட்டிடம் புதியது அல்ல என்பது தெளிவாகிறது. இக்கழிவறை குறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி பி.ஆர்.ஓ-வை தொடர்பு கொண்டு பேசியதில், பல ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட கழிவறை என்றும், இக்கழிவறையானது பெரியவர்களின் பயன்பாட்டிற்குக் கட்டப்பட்டது அல்ல. குழந்தைகளுக்காகக் கட்டப்பட்டது என தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி பத்திரிக்கை செய்தி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், “கோயம்புத்தூர் மாநகராட்சி, 66 வார்டு, அம்மன்குளம் பகுதியிலுள்ள இக்கழிப்பிடம் 1995ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும் தனித்தனி கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சிறுவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில், சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கதவுகள் இருந்தால் குழந்தைகளால் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதாலும் கதவுகள் பொருத்தப்படவில்லை.

இக்கழிப்பிடம் சிறுவர்களுக்கான பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற கழிவறை வேறு எங்கும் கட்டப்பட்டுள்ளதா எனத் தேடியதில், உத்திர பிரதேசத்தில் இருப்பதை அறிய முடிந்தது. உத்திர பிரதேசம், பஸ்தி மாவட்டத்தில் பியுரா என்ற கிராமத்தில் இதே போன்ற கழிவறை கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக Deccan Herald 2021, மார்ச் 6ம் தேதி செய்தியும் வெளியிட்டிருக்கிறது. 

அங்கும் இதேபோல் சர்ச்சையாக, பியுரா கிராமத்திலுள்ள இரட்டை கழிவறை குறித்து Deccan Herald வெளியிட்டுள்ளது. அங்கும் கழிவறை குழந்தைகளின் பயத்தை போக்கவே இவ்வாறு கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது. 

இருவர் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கழிவறையானது திமுக ஆட்சியில் கட்டப்பட்டதில்லை. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. மேலும், குழந்தைகளின் பயத்தினை போக்க உத்திர பிரதேசத்திலும் இம்மாதிரியான கழிவறை கட்டப்பட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில், இருவர் பயன்படுத்தும் வகையில், கதவுகள் கூட இல்லாமல் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கழிவறை என பரப்பப்படும் புகைப்படம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது அல்ல. கிராமங்களில் கழிவறை பயன்படுத்துவது தொடர்பாகக் குழந்தைகளின் அச்சத்தினை போக்க இம்மாதிரியான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. பெரியவர்களின் பயன்பாட்டிற்குக் கட்டியது அல்ல என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader