This article is from Jan 22, 2018

Coke குழந்தைகளுக்கானதல்ல என Coca cola நிறுவனமே பகீர் தகவல் !

பரவிய செய்தி

Coca-Cola குளிர்பானத்தின் விளம்பரத்திலேயே, இது குழந்தைகளுக்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ளனர். ஆக, நாம் தெரிந்தே குழந்தைகளுக்கு விஷத்தைக் கொடுக்கிறோம் என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

செயற்கை சுவையூட்டிகள் பற்றிய பாதுகாப்பு எச்சரிக்கையே தவிர, அனைத்து பானங்களும் குழந்தைகள் குடிக்க கூடாது என்பதல்ல என்று கோக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளக்கம்

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் முழுநீளப் படமாக கோக்க-கோலாவின் விளம்பரம் வெளியாகி இருந்தது. விளம்பரத்தில் லிம்கா, ஸ்ப்ரைட், தம்ப்ஸ் அப், கோக் போன்ற பானங்களின் படத்திற்கு கீழே நான்கு வரியில் கண்ணுக்கு எளிதாகப் புலப்படாதவாறு சிறிதாய் சில விவரங்கள், அவற்றில் முக்கியமானவை கீழ் வருமாறு…

  • இதில் பழங்கள் சேர்க்கப்படவில்லை.
  • சுவையூட்டும் செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
  • கார்போனேட் பானத்தில் Aspartame , Acesulfame Potassium இவற்றின் கலவையும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகளுக்கு உகந்தது அல்ல என்றும் அச்சிடப்பட்டிருந்தது. 

கோலா குளிர்பானத்தில் பல்வேறு இரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் அது உடலுக்கு தீங்கானது என்று பலரும் கூறி வரும் வேளையில் அந்நிறுவனத்தின் விளம்பரத்தில் இவை குழந்தைகளுக்கு உகந்தது அல்ல என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பானங்களில் சேர்க்கபடும் செயற்கை சுவையூட்டிகள் பற்றிய பாதுகாப்பு எச்சரிக்கையே தவிர, அனைத்து பானங்களும் குழந்தைகள் குடிக்க கூடாது என்பது அல்ல. செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படும் “ டயட் மற்றும் லைட்ஸ்” பானங்களான கோக் ஜிரோ, டயட் கோக் போன்றவற்றிக்கு பொருத்தும். இவற்றில் இனிப்பு சுவைக்காக செயற்கை இனிப்பை சேர்கின்றனர். எனவே, கோக் பானங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது தான் என்று கோக்க-கோலாவின் செய்தித் தொடர்பாளர் அம்ஜத் தெரிவித்துள்ளார். 

“ இது மாதிரியான விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்த விளம்பரத்தில் இடம்பெற்ற எச்சரிக்கையானது அனைத்திற்கும் பொருந்தாது என்றும் கூறியுள்ளார் ”.

கோலா நிறுவனம் தனது விளம்பரக் கொள்கையில் குழந்தைகள் பற்றி கூறியிருப்பது யாதெனில்,

  • 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் நேரடியாக விளம்பரம் செய்வதில்லை.
  • 35 சதவீதத்திற்கு அதிகமான குழந்தை பார்வையாளர்களை கொண்ட ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதில்லை.
  • இந்த கொள்கை 12வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அச்சு ஊடகங்கள், குறுஞ்செய்தி, இணையதளம், சமூக வலைதளம், சினிமா போன்ற அனைத்திற்கும் பொருந்தும்.
  • பிற அமைப்புகளுடன் சேர்ந்து வெளிப்படையாகவே விளம்பரங்களை கண்காணிப்பு செய்கின்றோம்.
  • “ Global School Beverage Guidelines ”மூலம் எங்களின் நடவடிக்கைகள் பற்றி உலகம் முழுவதும் தெரிவித்து வருகிறோம் என்று அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதுவாக இருப்பினும், செயற்கை சுவையூட்டிகள், இரசாயனங்கள் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பானங்களை அருந்துவதா வேண்டாமா ! என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader