கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் மதக்கலவரம் இல்லை எனப் பொய் சொன்ன ஜக்கி வாசுதேவ் !

பரவிய செய்தி
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் மதவாதக் கலவரங்கள் நிகழ்ந்ததாக நான் கேள்விப்படவில்லை – ஜக்கி வாசுதேவ் !
மதிப்பீடு
விளக்கம்
ஜூன் 6-ம் தேதி ஜக்கி வாசுதேவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியின் போது, ” நாங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, நாட்டில் பெரிய அளவில் மதவாதக் கலவரங்கள் நடக்காத வருடமே இல்லை. ஒவ்வொரு வருடமும் எங்காவது பெரிய கலவரங்கள் நடந்து கொண்டே இருக்கும். ஆனால், குறைந்தது 5-6 ஆண்டுகளில் அல்லது 10 ஆண்டுகளில் நான் (மதவாத வன்முறை பற்றி) கேள்விப்படவே இல்லை ” எனத தெரிவித்து இருக்கிறார்.
உண்மை என்ன ?
2022 மார்ச் 22-ம் தேதி லோக்சபாவில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந் ராய், 2016 முதல் 2020 வரையில் பதிவான மதவாதக் கலவரங்களின் எண்ணிக்கையை அளித்து இருந்தார். அமைச்சர் அளித்த பதிலின்படி, நாட்டில் அந்த 4 ஆண்டுகளில் மட்டும் 3,399 மதவாதக் கலவரங்கள் நிகழ்ந்து இருக்கிறது.
இதேபோல், 2012 முதல் 2016க்கு இடையே இருமுறை நாட்டில் நிகழ்ந்த மதவாத கலவரங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் நாடாளுமன்ற பதிலில் அளிக்கப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிகளின்படி பார்க்கையில், 2012 முதல் 2020 வரையிலானக் காலக்கட்டத்தில் 6,285 மதவாதக் கலவரங்கள் பதிவாகி இருக்கின்றன. மேலும், 2012-2017க்கு இடையில் மதவாத கலவரங்களில் 616 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
பெரிய மதவாதக் கலவரங்கள் :
இந்தியாவில் பெரிய அளவில் மதவாதக் கலவரங்கள் நிகழவே இல்ல எனக் கூறுவது தவறான தகவல். 2020-ம் ஆண்டு பிப்ரவரியில், வடகிழக்கு டெல்லியில் சிஏஏ சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும், அந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இது மிகப்பெரிய மதவாதக் கலவரங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர், 5௦௦-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2022 ஏப்ரல் மாதம், ராமநவமியின் போது 7 மாநிலங்களில் மதவாதக் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒவ்வொரு ஆண்டிலும், பெரிய அளவிலான மதவாதக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளது.
முடிவு :
நம் தேடலில், கடந்த 10 ஆண்டுகளில் மதவாதக் கலவரங்கள் நிகழவில்லை என ஜக்கி வாசுதேவ் கூறியது தவறான தகவல். ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நிகழும் மதவாதக் கலவரங்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டு வருகிறது மற்றும் பெரிய அளவில் வெடிக்கும் மதவாத மோதல்களை ஒவ்வொரு ஆண்டும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.