மதக்கலவரம் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் ! உத்திரப்பிரதேசம் முதலிடம்.

பரவிய செய்தி

மதக்கலவரங்கள், போலி என்கவுண்டர்கள், கஸ்டடி மரணங்கள் என அதிகம் நடக்கும் நம்பர் 1 மாநிலமாக பாஜக ஆளும் உத்திரப்பிரதேச மாநிலம் உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

2017-ல் இந்தியாவில் வகுப்புவாத கலவரங்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்திரப்பிரதேச மாநிலம் 195 சம்பங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

விளக்கம்

மார்ச் 14-ம் தேதி நடைபெற்ற லோக் சபா கூட்டத்தில் யூனியன் உள்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் நாட்டில் நிலவும் வகுப்புவாத கலவரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை தாக்கல் செய்தார்.

நாட்டில் நடைபெறும் வகுப்புவாத கலவரங்கள், நில மற்றும் சொத்து மோதல்கள், பாலின சார்ந்த குற்றங்கள், சமூக வலைத்தளம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் இதர காரணிகள் ஆகியவற்றை மையமாக கொண்டு இப்பட்டியல் தயார்ப்படுத்தப்பட்டது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதில், இந்திய அளவில் நடைபெறும் வகுப்புவாத சம்பவங்கள் அதிகரிப்பதாகவும், 2016-ல் 703 ஆக இருந்த குற்றங்கள் 2017-ல் 822 ஆக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளை விட அதிகமாக 2017-ல் 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டிலேயே அதிக வகுப்புவாத கலவரங்கள் உள்ளிட்ட பல சம்பவங்கள் நடைபெறும் மாநிலமாக உத்திரப்பிரதேச மாநிலம் திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் நடைபெற்ற 822 சம்பங்களில் 195 சம்பவங்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. வகுப்புவாத சம்பவங்கள் உத்திரப்பிரதேசத்தில் புதிதாக ஒன்றும் நடக்கவில்லை. உ.பி-யில் 2016-ல் 162 சம்பவங்களும், 2015-ல் 155  சம்பவங்கள் என தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

2017-ல் உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற கலவரங்களில் 540 பேர் காயமடைந்துள்ளனர், 44 பேர் கொல்லப்பட்டனர். இவை 2016-ல் நடைபெற்றதை விட அதிகம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாக 2013-ல் உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தில் 60 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இனி மாநிலத்தில் ஒரு கலவரம் கூட நடக்காது என்று உத்திரவாதம் அளித்தார் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்.

statement communal violence

முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் குற்றச் சம்பவங்கள் 15%  அதிகரித்துள்ளது என்பதை எடுத்துரைக்கும்படி இந்த புள்ளி விவரம் அமைந்துள்ளது.

உத்திரப்பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக கர்நாடகாவில் 100 சம்பவங்களும், ராஜஸ்தானில் 91 சம்பவங்களும், பீகாரில் 85, மத்தியப்பிரதேசத்தில் 60 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் கலவரங்கள் பற்றிய இந்த பட்டியல், தமிழ்நாட்டில் கலவரச் சம்பவங்கள் பெரிதாக நடைபெறவில்லை என்று தெரிவிக்கின்றன.

வட மாநிலங்களில் உ.பி, ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் தென்னிந்தியாவில் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டுமே அதிகளவிலான வகுப்புவாத கலவரங்கள் மற்றும் இதர குற்றச் சமபவங்கள் அதிகம் நடைபெறுகிறது என்று இப்புள்ளி விவரம் தெளிவுப்படுத்தியுள்ளது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button