பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சொல்லும் பொய் !

இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் மீது வழக்கு பதியவே கூடாது என காங்கிரஸ் சட்டம் கொண்டுவந்ததாக ஒரு பொய்யை சொல்கிறார்.

பரவிய செய்தி

இந்தியாவில் எங்கு கலவரம் நடந்தாலும் இந்துக்கள் மீது மட்டுமே FIR போட வேண்டும். கிறிஸ்தவர்கள் மீதோ இஸ்லாமியர்கள் மீதோ FIR’ஏ போட கூடாது என்று ஒரு சட்ட மசோதாவை 2013 காங்கிரஸ் கொண்டு வந்தது. – அஸ்வத்தாமன், பாஜக மாநில செயலாளர்.

Link

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசிய வீடியோ ஒன்று இன்ஸடாகிராமில் வைரலாகி வருகிறது. அதில் அவர், 2013ல் காங்கிரஸ் ஒரு மசோதாவை  தாக்கல் செய்ய முயற்சி செய்தது. அதனை பாஜக கடுமையாக எதிர்த்தது. வன்முறைக்கு எதிரான மசோதா. அந்த மசோதாவின் கான்செப்ட் என்னவென்று தெரியுமா? இந்தியாவில் எங்கு கலவரம் நடந்தாலும், இந்துக்கள் மீது மட்டுமே FIR போட முடியும். கிருஸ்தவர்கள் மீதோ இஸ்லாமியர்கள் மீதோ FIR’ரே போடக்கூடாது. இப்படி ஒரு மசோதா தாக்கல் செய்தனர். தெரியுமா. Anti-Violence Bill 2013.

அவர்கள் ஆட்சியை விட்டு போவதற்கு முன், இப்போது நாங்கள் எப்படி ராமர் கோவில் என்கிற சாதனையை செய்கிறோமோ அது போல் அவர்களுடைய பெரிய சாதனையாக இதனை தான் கொண்டுவர முயற்சி செய்தனர். இதைவிட கேடுகெட்ட, காட்டுமிராண்டித்தனமான, ஒருதலை பட்சமான, மோசமான ஒரு சட்டத்தை உலகத்தில் நீங்கள் எங்காவது காட்ட முடியுமா? இந்தியாவில் வேண்டாம். உலகத்தில் எங்காவது காட்டிட முடியுமா? ஒரு கலவரம் நடந்தால் இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிய வேண்டும். கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது வழக்கே பதிய கூடாது. கொலையே நடந்து இருந்தாலும் வழக்கு பதியக்கூடாது” என்று பேசியிருந்தார்.

உண்மை என்ன ?

இந்த வீடியோவில் ‘ஆதன் தமிழ்’ watermark இருந்ததால் அதனை வைத்து keyword search செய்து இதன் முழு காணொளியைத் தேடினோம். அவ்வாறு தேடியதில், ‘ஆதன் தமிழ்’ சேனலுக்கு ஜனவரி 3ம் தேதி பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அளித்த பேட்டியில் தான் மேற்குறிப்பிட்ட பகுதி இடம் பெற்றுள்ளது என்று தெரியவந்தது. அதில் 38வது நிமிடத்தில் அவர் பேசும் மேற்கூறியவற்றை சொல்வது கீழே இருக்கும் YouTube இணைப்பின் மூலம் பார்க்கலாம்.

2013 வந்த சட்ட மசோதா என்ன ?

அஸ்வத்தாமன் சொல்வது போல் இந்த சட்ட மசோதாவிற்கு Anti-Violence Bill 2013 என்கிற பெயர் கிடையாது. இந்த சட்ட மசோதாவின் உண்மையான பெயர் ‘Prevention of Communal and Targeted Violence (Access to Justice and Reparations) Bill, 2011’.

இது தொடர்பாக 2005ம் ஆண்டில் முதல் முறையாக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நிலைக்குழுவின் அறிக்கை 2006ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக அந்த மசோதா எந்த முன்னேற்றமும் அடையாமல் இருந்தது.

இந்நிலையில், 2011ம் ஆண்டு தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) இதே சட்டத்திற்கு சில மாறுதல்களுடன் ஒரு வரைவு மசோதாவை அளித்தது. 2005ல் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா வாபஸ் பெறப்பட்டு புதிய மசோதா 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று அப்போது இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்தது. இருப்பினும், மாநிலங்களவையில் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக அந்த மசோதா சமர்பிக்கப்படாமலேயே (deferred) ஒத்திவைக்கப்பட்டது.

மசோதாவில் சொல்லப்பட்டது என்ன ?

இந்த மசோதாவின் நோக்கம் ஜாதி, மதக்கலவரங்களை ஒடுக்கவும், திட்டமிட்டு சமூகத்தில் விளிம்புநிலையில் இருப்பவர்களை தாக்கும் செயல்களை தடுக்கவும் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் பிரிவு 3 (c & e) இதனை தெளிவாக விளக்குகிறது.

அதில் குறிப்பாக, ஒருவர் எந்த அடையாளத்தை உடையவர் (group) என்பதை வைத்து திடீரெனவோ அல்லது முன் திட்டமிடலுடனோ அவருக்கு எதிராக நடத்தப்படும் செயல்கள் மற்றும் அதனால் ஏற்படும் தனிப்பட்ட மற்றும் பொருளாதார இழப்புகள் மற்றும் அதன் மூலமாக தேசத்தின் மதசார்பற்ற தன்மையை சிதைத்தல் என்பதை “communal and targeted violence” என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

Section 3 (c) of ‘Prevention of Communal and Targeted Violence (Access to Justice and Reparations) Bill, 2011’

மேலும்; பிரிவு (e) படி ‘group’ என்பதற்கு ஒரு மாநிலத்தில் இருக்கும் மத சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர் மற்றும் பட்டியலிடப்பட்ட ஜாதியில் இருப்பவர்கள் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) என்று விளக்கப்பட்டுள்ளது.

Section 3 (e) of ‘Prevention of Communal and Targeted Violence (Access to Justice and Reparations) Bill, 2011’

மத மற்றும் மொழி சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருக்கும் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை தடுக்க இந்த சட்ட மசோதா முயல்கிறது. அப்படி ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்கவே இந்தச் சட்டம் பயன்பட்டிருக்கும்.

ஆனால், இந்த மசோதாவிற்கு எதிராக பாஜக மற்றும் வலதுசாரிகள் ‘இது இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது. இந்துக்கள் மட்டுமே வன்முறை செயலில் ஈடுபடுபவர்கள் என்று இந்த சட்டம் சொல்கிறது. இந்த சட்டம் வந்தால் இந்துக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்’ என்று அப்போது வாதிட்டனர். இதுவே ஒரு தவறான புரிதல் மட்டுமல்லாது ஒரு திரிபுவாதமும் கூட. பின்னர், இந்த திரிபுவாதமே இந்துக்களுக்கு எதிராக மட்டுமே காங்கிரஸ் இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது என்றும் நீட்சி பெற்றது. இந்தச்சட்டம் மூலம் கலவரம் ஏற்பட்டால் இந்துக்கள் மீது மட்டுமே வழக்குகள் போடப்படும் என்றும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது வழக்கு போடக்கூடாது என்று சட்டம் சொல்வதாகவும் ஒரு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு தீவிரமாக பரப்பப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராக FIR போடக்கூடாது ?

இந்த சட்ட மசோதாவின்படி ‘group’ என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளவர்களில் நான்கு பிரிவினர் இடம்பெற்றுள்ளனர்.

  • மத சிறுபான்மையினர்
  • மொழி சிறுபான்மையினர்
  • பட்டியலின மக்கள் (SC)
  • பழங்குடியினர் (ST)

இதில் மத சிறுபான்மையினர் தவிர்த்து மற்ற மூன்று பிரிவுகளில் இருக்கும் மொழி சிறுபான்மையினர் மற்றும் SC/ST மக்களும் இந்துக்கள் தான் என்கிற உண்மையை முற்றிலும் மறைத்துவிட்டு, இந்த சட்டம் மத சிறுபான்மையினர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று பாஜகவின் தமிழ்நாடு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கூறுகிறார். அதிலும், கிருஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் எந்த குற்றம் செய்தாலும் அவர்கள் மீது FIR போடக்கூடாது என்று இருப்பதகாவும், அவர்கள் கொலையே செய்தாலும் வழக்கு பதியக்கூடாது என்று இருப்பதாகவும் இந்துக்கள் மீது மட்டுமே வழக்கு பதிய வேண்டும் என்று சட்ட மசோதா சொல்வதாகவும் தவறாக கூறுகிறார். உண்மையில் அது போன்று எந்த பிரிவும் இந்த சட்டத்தில் இடம் பெறவில்லை.

மேலும், ஒரு கலவரம் நடந்தால் இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code) படி உரிய பிரிவுகளில் குற்றம் செய்தவர் மீது வழக்கு பதியப்படும். அதில் எந்த ஜாதி, மதத்தினர் ஈடுபட்டிருந்தாலும் விடுப்பு எதுவும் அளிக்கப்படாது. அனைவர் மீதும் வழக்கு பதியப்படும். அதுவே, அந்த கலவரத்தில் மேற்கூறப்பட்டுள்ள பிரிவினர் பாதிக்கப்பட்டிருந்தால், கூடுதலாக இந்த சட்டத்தின்படி உரிய பிரிவுகளிலும் வழக்கு பதியப்படும். அவ்வளவே. ஜாதி, மதக் கலவரங்களில் அதிகம் பாதிக்கப்படும் மக்களாக மேற்கூரிய பிரிவினர் இருப்பதால் ஒரு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மட்டுமே இந்த சட்டம் முனைந்தது. மாறாக, அந்த குற்றத்தை அவர்கள் செய்தால் வழக்கே பதியாமல் விடுவிக்க வேண்டும் என்று இந்த சட்டத்தில் எங்கும் கூறவில்லை.

வடநாட்டில் பரப்பிய பொய் :

இது குறித்து மேலும் தேடியபோது, இதே பொய்யை வடநாடு எங்கிலும் ஏற்கனவே இந்தியில் பரப்பியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. அதை, இப்போது தமிழ்ப்படுத்தி அஸ்வத்தாமன் பேசி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by katter hindu (@modi_sarkar_2024_bjp)

மேலும், வட மாநிலங்களில் பரவிய பொய்யில், சட்ட மசோதாவின் பிரிவு 7ல் ஒரு இஸ்லாமியப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால் ஒட்டுமொத்த இந்துக்களும் குற்றவாளிகளாக கருதப்படவேண்டும் என்றும், அதுவே இந்துப் பெண் வன்கொடுமைக்கு உள்ளானால் இஸ்லாமியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டது. அதே போல், பிரிவு 42ன் படி, கலவரங்களின் போது இந்துக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் இஸ்லாமியர்கள் கூறினாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால், அப்பிரிவுகளில் அவ்வாறு எந்த விதிகளும் இல்லை. 

முடிவு :

கலவரம் ஏற்பட்டால் இந்துக்கள் மீது மட்டுமே வழக்கு பதியலாம் என்றும் இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்கள் மீது வழக்கு பதிய முடியாது என்று காங்கிரஸ் கொண்டு வந்த சட்ட மசோதாவில் எங்கும் கூறவில்லை.

அந்த சட்டமே ஜாதி, மத கலவரங்கள் மூண்டால் அதிகம் பாதிப்பு அடையும் இடத்தில் இருக்கும் பட்டியிலின மக்களுக்கும், மொழி சிறுபான்மையினருக்கும், மத சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்யவே. இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு மட்டுமான சட்டமும் அல்ல. அஸ்வத்தாமன் கூறிய கருத்துகள் தவறானவை.

Please complete the required fields.
ஆதாரம்

Ramasamy Jayaprakash

Ramasamy works as a Senior Sub-Editor at YouTurn and writes articles in Tamil and English. He also makes videos for YouTurn's Tamil & English YouTube channels.
Back to top button
loader