காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கர்நாடகா மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கரின் ஓவியம் வைக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்றும் ராகுல் “சாவர்க்கர்” அல்ல! நான் ராகுல் “காந்தி” -ராகுல் காந்தி. அவன் கெடக்குறான்! நீ சாவர்க்கர் போட்டோவ மாட்டு -கர்நாடக காங்கிரஸ் அரசு. இடம்: Majestic Metro Station, Karnataka

X link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் மோடிக்கும் தொழில் அதிபர் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆதாரங்களுடன் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதன் பிறகு மோடி துணைப் பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கிடையில் ராகுல் காந்தியின் இங்கிலாந்து பயணமும் வலதுசாரிகளால்  சர்ச்சையாக்கப்பட்டது. 

இவற்றையெல்லாம் பற்றி ராகுல் காந்தி அளித்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் ‘இங்கிலாந்து உரைக்கு பாஜக சொல்வதுபோல் மன்னிப்பு கேட்பீர்களா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ராகுல் ‘நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’ என்று கூறியது விவாத பொருளாக மாறியது. 

இந்நிலையில் ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து இவ்வாறு பேசுகிறார். ஆனால், அவர்களது கட்சி ஆட்சிக்கு வந்ததும் கர்நாடக மாநிலம் மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கரின் ஓவியம் வரையப்பட்டுள்ளது என புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. அப்படத்தில் சாவர்க்கர், சந்திரசேகர் ஆசாத் மற்றும் உதம் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உண்மை என்ன ?

பரவக் கூடிய ஓவியம் குறித்து 2022, ஆகஸ்ட் 16ம் தேதி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ‘Deccan Herald’ தளத்தில் வெளியான செய்தியில் ‘இந்த ஓவியம் கர்நாடகா மாநிலம் மெஜஸ்டிக்கில் உள்ள கெம்பேகவுடா மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவாயில் படிக்கட்டுகளுக்கு அருகில் அமைந்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது. 

இது பற்றி அதிகாரி ஒருவர் டெக்கன் ஹெரால்டிடம், ‘இந்த ஓவியம் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு சித்ரகலா பரிஷத்தில் இருந்து வாங்கப்பட்ட கலைப் படைப்புகளின் ஒன்று. ஒன்றிய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து BMRCL (Bengaluru Metro Rail Corporation Limited) சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவப்படங்களை ஆர்டர் செய்து வாங்கியது. எந்த தலைவர்கள் என்று நாங்கள் தேர்வு செய்யவில்லை. அதனை சித்ரகலா பரிஷத்தில் உள்ள கலைஞர்களால் தேர்வு செய்தனர்‘ எனக் கூறியுள்ளார். இதே போன்று ‘Indian Express’ தளத்திலும் இது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. 

2022, ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பசவராஜ் பொம்மை முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி 2023, மே மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே அம்மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. எனவே அந்த ஓவியம் பாஜக ஆட்சியின் போது வைக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

இதேபோன்று கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்ற போது அம்மாநில சட்டமன்றத்தில் சாவர்க்கரின் உருவப்படம் திறக்கப்பட்டது. இதற்குக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து அவையின் மையப் பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரயில் நிலையத்தில் உள்ள இந்த ஓவியம் குறித்து 2022, ஆகஸ்ட் மாதம் விவாதம் தொடங்குவதற்கு முன்னர், சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட், 13) ஷிவமொக்கா நகரின் மையப் பகுதியில் உள்ள அமிர் அகமது சர்க்கிள் எனும்  இடத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாவர்க்கரின் படம் தாங்கிய பதாகையை வைத்தனர். அப்பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். 

அதனை தொடர்ந்து சாவர்க்கரின் படம் இருந்த பதாகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில், சாவர்க்கரின் படத்தை அகற்றச் சிலர் முயற்சி செய்தனர். இதனைத் தடுக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர். இன்னும் சிலர் திப்பு சுல்தானின் படத்தை வைக்க முயற்சி செய்ததையும் காவல் துறையினர் தடுத்துள்ளனர். இந்த சம்பவத்தின் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தார். 

இந்த சம்பவத்தினை தொடர்ந்து தான் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்த சாவர்க்கரின் ஓவியம் பேசு பொருளாகியுள்ளது. 

இவற்றில் இருந்து கர்நாடக மாநிலம் மெஜஸ்டிக்கில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கரின் ஓவியம் பாஜக ஆட்சியின் போது வைக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

முடிவு : 

நம் தேடலில், காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கர்நாடகாவின் மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கரின் ஓவியம் வைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அந்த ஓவியம் பாஜக ஆட்சி செய்த போதே வைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.
ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader