தெலங்கானா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களுக்கு முதலிடம் எனப் பரவும் பொய் செய்தி !

பரவிய செய்தி
மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி.. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு (காங்கிரஸ் அரசு) இதை ஒரு மாநிலத்தில் (தெலுங்கானா) செய்ய முடியும் என்றால்., காங்கிரஸுக்கு மத்தியில் அதிகாரம் கிடைத்தால்., நம் தாய்நாடு இந்தியாவுக்கு என்ன நடக்கும் என்று சிந்தியுங்கள்..
மதிப்பீடு
விளக்கம்
தெலங்கானா மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் வருகின்ற 2024 ஜனவரி 16 அன்றோடு முடிவடைய உள்ளது. எனவே 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவின் சட்டசபை தேர்தல் வருகின்ற 2023 டிசம்பருக்குள் நடந்து முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் “தெலங்கானாவின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களுக்கு தான் முதலிடம், காங்கிரஸ் அரசு ஒரு மாநிலத்தில் இவ்வாறு செய்ய முடியும் என்றால், காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நம் இந்தியாவுக்கு என்ன நடக்கும் என்று சிந்தியுங்கள்” என்பது போன்று குறிப்பிட்டு ரிபப்ளிக் டிவியின் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமி பேசிய விவாத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி 😡😡😡
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு (காங்கிரஸ் அரசு) இதை ஒரு மாநிலத்தில் (தெலுங்கானா) செய்ய முடியும் என்றால்., காங்கிரஸுக்கு மத்தியில் அதிகாரம் கிடைத்தால்., நம் தாய்நாடு இந்தியாவுக்கு என்ன நடக்கும் என்று சிந்தியுங்கள். pic.twitter.com/Rafr4gJyj2— தேசியம் பேசும் தமிழன் (@bharanipaints) May 24, 2023
மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி 😡😡😡
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு (காங்கிரஸ் அரசு) இதை ஒரு மாநிலத்தில் (தெலுங்கானா) செய்ய முடியும் என்றால்., காங்கிரஸுக்கு மத்தியில் அதிகாரம் கிடைத்தால்., நம் தாய்நாடு இந்தியாவுக்கு என்ன நடக்கும் என்று சிந்தியுங்கள். pic.twitter.com/aY5X28m1QD— Tamizhan Mani (@TamizhanMani16) May 24, 2023
பரவி வரும் அந்த வீடியோவில் அர்னாப், “தெலங்கான மாநிலத்தில் முஸ்லீம்களுக்கான மருத்துவமனைகள் நிறுவப்படும். அந்த மருத்துவமனைகளில் இந்து, சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினர் நுழைந்தால் வெளியேற்றப்படுவார்கள். முஸ்லீம்களாக இல்லாத வரையில் அவசர காலத்தில் கூட நீங்கள் அங்கே செல்ல முடியாது . மேலும் மசூதிகளுக்கும், தேவாலயங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்போகிறார்கள். ஆனால் கோவில்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டுதலங்களுக்கு இந்த சலுகை கிடையாது.
மேலும் முஸ்லீம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இலவச சலுகை வழங்கப்படும். இது தவிர உருது மொழியை இரண்டாவது அரசாங்க மொழியாக அறிவிக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். மேலும் முஸ்லீம் மாணவர்களின் மேல்படிப்புக்காக இருபது லட்சம் வழங்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதன் மூலம் காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதை பார்க்க முடிகிறது.” என்று பேசியிருப்பதை காண முடிந்தது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், 2023-ஆம் ஆண்டுக்கான தெலங்கானா சட்ட சபை தேர்தல் அறிக்கையை இன்னும் எந்த கட்சிகளும் வெளியிடவில்லை என்பதையும், குறிப்பாக பரவி வரும் பதிவுகளில் குறிப்பிட்டிருப்பது போல் காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் தனது தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
கடந்த மே 11 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையில் காங்கிரஸ் தனது அறிக்கையை வருகின்ற செப்டம்பர் 17 அன்று வெளியிடும் என்று தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கூறியதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் பரவி வரும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் விவாத வீடியோ குறித்து தேடியதில், 2018 நவம்பர் 28 அன்று Republic World எனும் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் அதன் முழுமையான வீடியோவை காண முடிந்தது.
இதன் மூலம், 2018 நவம்பர் 27 அன்று தெலங்கானா சட்டசபை தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது என்பதையும், அது தொடர்பாக அன்று நடத்தப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் முழு விவாத வீடியோவில், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் 2:09 நிமிட வீடியோ மட்டும் எடுக்கப்பட்டு உள்ளது என்பதயும் அறிய முடிகிறது.
தெலங்கானாவின் 2018-ஆம் ஆண்டிற்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டதா ?
காங்கிரஸ் வெளியிட்ட தெலங்கானா சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை நாம் ஆய்வு செய்து பார்த்ததில், “தெலங்கானா மாநிலத்தில் முஸ்லீம்களுக்கான மருத்துவமனைகள் நிறுவப்படும். அந்த மருத்துவமனைகளில் இந்து, சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினர் நுழைந்தால் வெளியேற்றப்படுவார்கள். முஸ்லீம்களாக இல்லாத வரையில் அவசர காலத்தில் கூட நீங்கள் அங்கே செல்ல முடியாது.” என்று பரவி வரும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போல எந்த தகவல்களும் இல்லை என்பதை அறிய முடிந்தது.
மாறாக அதில் 20 முதல் 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் ஒவ்வொரு மண்டலங்களிலும், 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் ஒவ்வொரு தொகுதிகளிலும் ஏற்படுத்தப்படும் என்றும், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் குறிப்பாக 643 கோவில்களில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சுகாதார அட்டைகள் மற்றும் விபத்து காப்பீடு மற்றும் ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கும் இது உறுதியளிப்பதாக கூறியுள்ளது.
இதே போன்று மசூதிகளுக்கும், தேவாலயங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றோ, கோவில்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டுதளங்களுக்கு இந்த சலுகை கிடையாது என்றோ அதில் குறிப்பிடவில்லை. மாறாக கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் மற்ற வழிபாட்டு தளங்கள் அனைத்திற்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
அடுத்ததாக, உருது மொழி இரண்டாவது அரசாங்க மொழியாக அறிவிக்கப்படும் என்று கூறியது தொடர்பாக தேடி பார்த்ததில், உருது மொழி குறித்து பரவி வரும் வீடியோவில் கூறியிருப்பது உண்மை என்பதை அறிய முடிந்தது.
மேலும், முஸ்லீம் மாணவர்களின் மேல்படிப்புக்காக இருபது லட்சம் வழங்கப்படும் என்று கூறியிருப்பது குறித்து ஆய்வு செய்ததில், ஏழை சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்விக்காக ₹20 லட்சம் வழங்கப்படும் என்றும், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், ஓபிசி மற்றும் பிற பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கல்வியைத் தொடர ₹25 லட்சம் உதவி வழங்கப்படும் என்றும் இது உறுதியளிக்கிறது.
முஸ்லீம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இலவச சலுகை குறித்து தேடியதில், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வழங்குவதில் மத அடிப்படையில் அனைத்து வகையான பாகுபாடுகளும் நிறுத்தப்படும். மதத்தின் அடிப்படையில் யாருக்கும் தனியார் துறையில் வேலை வழங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருப்பதை காணமுடிந்தது.
முடிவு:
நம் தேடலில், சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் வீடியோ, 2018 நவம்பர் 28 அன்று ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட பழைய வீடியோ என்பதையும், அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டதாகக் கூறும் தகவல் தவறானது என்பதையும் அறிய முடிகிறது.