மோடியின் முகத்திற்கு நேராக கேள்வி கேட்டு திணறடித்த காங்கிரஸ் எம்.பி எனப் பரப்பப்படும் எடிட் வீடியோ !

பரவிய செய்தி

பிரதமர் மோடி யை மூஞ்சிக்கு நேராவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சம்பவம் செய்த இமாச்சல் காங்கிரஸ் MP

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் முகத்திற்கு நேராக மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இமாச்சல் பிரதேசத்தின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி கேட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

https://twitter.com/PhoenixJaiSeela/status/1641092954956910592

அவ்வீடியோவில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களை யார் உருவாக்கியது? IIT, MMNT தொடங்கியது யார்? என நாடாளுமன்ற உறுப்பினர் மிக ஆவேசமாகப் பேசுகிறார். அவர் பேசுவதற்கு இடையில் பிரதமர் மோடி காண்பிக்கப்படுகிறார்.

உண்மை என்ன ?

பரவக் கூடிய வீடியோவில் உள்ள உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் விப்லவ் தாக்கூர்’ என்பதை அறிய முடிகிறது. தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் பரவியுள்ளது. அதில், “பாராளுமன்றத்தில் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தெரியாமல் திறு திறுனு முழிக்கும் பிரதமர் மோடி…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வீடியோக்களிலும் விப்லவ் தாக்கூர் பேசும்போது காண்பிக்கப்படும் மோடியின் வீடியோக்கள் வேறு வேறாக இருப்பதைக் காண முடிகிறது.

தற்போது பரவக் கூடிய வீடியோவில் ‘Courtesy: Sansad TV’ என இடதுபக்க மேல் ஓரத்தில் உள்ளது. அதனைக் கொண்டு விப்லவ் தாக்கூர் பேசிய முழு வீடியோவினை தேடினோம். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மாநிலங்களவையில் (ராஜ்யசபா) பேசிய வீடியோ கிடைத்தது. அதே வீடியோ ‘YOYO Tv’ என்னும் வேறொரு யூடியூப் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் விப்லவ் தாக்கூர் பேசும் போது பெரும்பாலான இருக்கைகள் காலியாக உள்ளது. அதே போல் பிரதமர் மோடியும் அந்த அவையில் இல்லை. ஆனால், அன்றைய தினம் மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் உரையாற்றியுள்ளார். இந்த வீடியோ மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் உள்ளது.

பரவக் கூடிய வீடியோவில் மோடி ஒரு இடத்தில் முகக் கவசம் அணிந்து அமர்ந்துள்ளார். வேறொரு இடத்தில் முகக் கவசம் இல்லாமல் நின்று கொண்டுள்ளார். அதில் ஒரு இடத்தில் ‘லோக்சபா’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோல் 2020ம் ஆண்டு பரவிய வீடியோவில், ‘OM BIRLA Hon’ble speaker’ என உள்ளது. அதன் கீப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், அந்த வீடியோ 2020, பிப்ரவரி 6ம் தேதி மோடி மக்களவையில் பேசியது என அறிய முடிகிறது. அந்த முழு வீடியோவும் மோடியின் யூடியூப் பக்கத்தில் உள்ளது. அதில், மோடி அதே உடையில் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு பேசுவதை காணலாம்.

இவற்றிலிருந்து மோடி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பேசும்போது எடுக்கப்பட்ட வீடியோவை, விப்லவ் தாக்கூர் மாநிலங்களவையில் பேசிய வீடியோவுடன் எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : குழாய் நீர் பயனாளிகள்: லோக் சபாவில் 8 கோடி எனச் சொன்ன மோடி ராஜ்ய சபாவில் 11 கோடி எனச் சொன்னாரா ?

இதேபோல், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் கை கொடுக்க மறுத்து விட்டார், குடிநீர் பயனாளிகள் குறித்து தவறான தகவல்களை  நாடாளுமன்றத்தில் பேசுகிறார் என பரப்பப்பட்ட போலி செய்திகளின் உண்மைத் தன்மையினை ‘யூடர்ன்’ கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : பிரதமர் மோடி இத்தாலியப் பிரதமருக்கு கை கொடுக்கும்போது அவமதிக்கப்பட்டாரா ?

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடியைக் காங்கிரஸ் எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டபோது மோடி பதில் சொல்லத் திணறியதாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. 2020ல் காங்கிரஸ் எம்.பி விப்லவ் தாக்கூர் மாநிலங்களவையில் பேசும்போது மோடி அந்த அவையில் இல்லை. அது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader