பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசலில் வசூலித்த கலால் வரி 14.4 லட்சம் கோடி – ராஜ்யசபாவில் பதில் !

பரவிய செய்தி

2014-2015(FY Year) முதல் 2020-2021FY Year)வரை பெட்ரோல் டீசல் மூலம் மத்திய அரசு கிடைத்த வரி(Includes Cesses) வருவாய் மட்டும்-₹14.4 லட்சம் கோடி ஆகும். காங்கிரஸ் விட்டுச்சென்ற Oil Bond மதிப்பு :1,34,423 crore.

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் பெட்ரோல் 100ரூ, டீசல் 95ரூ என விற்பனை செய்யப்படும் எரிபொருளின் ஒவ்வொரு லிட்டரிலும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வரிகளே அதிக பங்கை பெறுகின்றன. ஒரு சில மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் வரியில் தங்கள் பங்கை சில ரூபாய்கள் குறைத்தாலும், ஒன்றிய அரசு தன்னுடைய வரி பங்கை குறைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு அதிகம் எழுந்து வருகிறது.

Advertisement

சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90ரூபாய் மற்றும் டீசலுக்கு 31.80ரூபாய் என கலால் வரியை நிர்ணயித்து வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்கிற கேள்விகள் எழும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  ” எண்ணெய் நிறுவனங்கள் நினைத்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் ” என 2021 பிப்ரவரியில் பேசி இருந்தார்.

ஆனால், 2021 ஆகஸ்ட் மாதத்தில், ” 2007-08ல் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடாது என மன்மோகன் சிங் அரசு மானியம் அளிக்க முடிவு செய்தது. இதற்காக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 1.3 லட்சம் கோடிக்கு எரிபொருள் பத்திரங்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை வட்டியுடன் கட்டி முடிக்க 2026 வரை ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளில் 70,195 கோடி அரசு செலுத்தி இருக்கிறது. 2026 வரை ரூ.37,000 கோடி வட்டியாக செலுத்த வேண்டி உள்ளதால் எரிபொருள் விலை குறைக்க இயலவில்லை ” எனக் கூறி இருக்கிறார்.

ஆனால், ஒரு ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் ஒன்றிய பாஜக அரசு வசூலிக்கும் கலால் வரித் தொகையில் காங்கிரஸ் ஆட்சியில் வாங்கப்பட்ட எண்ணெய் பத்திரங்களின் தொகையானது பாதி கூட இல்லை.

சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் வரும் வருவாய் குறித்து ராஜ்யசபாவில் எம்.பி திக்விஜய சிங் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி அளித்த பதிலில், ” பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து வசூலிக்கப்படும் செஸ் உள்ளிட்ட மொத்த கலால் வரி 2014-15 முதல் 2020-21 வரையான நிதியாண்டில் சுமார் ரூ.14.4 லட்சம் கோடி ” எனக் கூறப்பட்டுள்ளது.

” இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒன்றிய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வசூல் கடந்த 6 ஆண்டுகளில் 300 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. மோடி அரசின் முதல் ஆட்சி நிதியாண்டான 2014-15ல் பெட்ரோல் மீதான கலால் வரி 29,279 கோடியும், டீசலுக்கு 42,881 கோடியும் அரசு வசூலித்தது.

Advertisement

நடப்பு நிதியாண்டின்(2020-21) முதல் 10 மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வசூல் 2.94 லட்சம் கோடியாக உயர்ந்தது என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இணை அமைச்சர் பதில் அளித்ததாக ” லைவ்மின்ட் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :  பிஜேபி ஆட்சியில் 2 லட்சம் கோடி எண்ணெய் ஒப்பந்த கடன் செலுத்தப்பட்டதா ?

2018-ம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்விற்கு காங்கிரஸ் ஆட்சியில் வாங்கப்பட்ட எண்ணெய் பத்திரங்களின் கடன்களே காரணம் என்றும், 2 லட்சம் கோடி கடனை மோடி அரசு அடைத்து விட்டதாகவும் கூறி வதந்திகள் பரப்பி விட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் வாங்கப்பட்ட எண்ணெய் பத்திர கடன் குறித்து மேற்காணும் கட்டுரையில் விரிவாக படிக்கலாம்.

உண்மையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் கிடைக்கும் வரி வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு, கொரோனா கால நடவடிக்கைகள் என அரசின் நிதி ஆதாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, வரியை குறைத்தால் அரசுக்கு கிடைக்கும் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கும் என்பதால் வரிகள் குறைக்கப்படுவதில்லை. ஆனால், வரிகளை குறைக்காததற்கு ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தையும் அளித்து வருகிறார்கள்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button