பிரியங்கா காந்தி கழுத்தில் சிலுவை அணிந்து இருப்பதாகப் பரப்பப்படும் எடிட் செய்த புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கழுத்தில் சிலுவை அணிந்து செல்வதாக பொதுக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
சோனியா குடும்பத்தை
நம்பும் இந்து முட்டாள்களே.. pic.twitter.com/h04B1DcEBj— ஶ்ரீனிவாசன்🚩 (@Srinivasan790) July 30, 2023
உண்மை என்ன ?
பிரியங்கா காந்தி கழுத்தில் சிலுவை அணிந்து இருப்பதாகப் பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020ம் ஆண்டு hwnews எனும் இணையதளத்தின் செய்தியில் பிரியங்கா காந்தியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த புகைப்படத்தில் சிலுவை இல்லை.
மேற்கொண்டு தேடுகையில், புகைப்பட விற்பனை தளமான Gettyimages இணையதளத்தில் இப்புகைப்படம் இடம்பெற்று உள்ளது. அதில், ” 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பேரணியில் பிரியங்கா காந்தி கலந்து கொள்ள வந்ததாக ” பதிவாகி இருக்கிறது.
2017ல் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட வீடியோ இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் யூடியூப் பக்கத்திலும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
2017ல் உத்தரப் பிரதேசத்தில் நடந்த கட்சிக் கூட்டத்திற்கு பிரியங்கா காந்தி வருகை தந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கழுத்தில் சிலுவை இருப்பது போல் எடிட் செய்து பொய்யான தகவலை பரப்பி உள்ளனர்.
மேலும் படிக்க : சோனியா காந்திக்கு பின்னால் “இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது எப்படி” என்ற புத்தகம் இருந்ததா ?
மேலும் படிக்க : ராஜீவ், சோனியா காந்தி திருமணம் இஸ்லாம் முறைப்படி நடந்ததாகப் பரப்பப்படும் பொய் !
இதற்கு முன்பாக, சோனியா காந்தி, இந்திரா காந்தி குறித்து மதரீதியாக பல்வேறு போலிச் செய்திகள் பரப்பப்பட்டன. அதுகுறித்த கட்டுரைகளையும் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கழுத்தில் சிலுவை அணிந்து இருப்பதாகப் பரப்பப்படும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.