செப்பு பாத்திரத்தில் தேங்காய் தண்ணீரைக் குடித்தால் உயிருக்கு ஆபத்தா ?

பரவிய செய்தி

கவனம்…  செம்பு பாத்திரத்தில் வைத்திருந்த தேங்காய் தண்ணீரை குடித்தவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். காரணம் தேங்காய் தண்ணீரிலுள்ள அமிலமும், தாதுக்களும் செம்புடன் கலந்து தேங்காய் தண்ணீரை காப்பர் சல்பேட்டாக மாற்றியதே. ஆகவே, செம்பு பாத்திரத்தில் இருந்து தண்ணீரை தவிர வேறு எந்த திரவத்தையும் ஊற்றி வைக்காதீர்கள்.

மதிப்பீடு

விளக்கம்

தண்ணீரை செப்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து அருந்துவதால் உடலுக்கு பல நன்மைகள் இருப்பதாக கூறிவருவதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், இயற்கை பானமான தேங்காய் தண்ணீரை செப்பு பாத்திரத்தில் வைத்து குடித்ததால் ஒருவர் உயிருக்கே ஆபத்தான சூழலில் இருப்பதாக எச்சரிக்கை மீம் ஒன்று பரவி வருகிறது.

Advertisement

செப்பு அல்லது காப்பர் பாத்திரத்தில் தேங்காய் தண்ணீரை அருந்துவது உயிருக்கு ஆபத்தா என ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம். இது தொடர்பாக மருத்துவர் பிரவீன் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பொழுது அவர் அளித்த பதில்,

” இதுபோல் நான் கேள்விப்பட்டது இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் கண்டதில்லை. காப்பர் சல்பேட் நச்சுத்தன்மை உடையதே. காப்பர் (செப்பு) ஆனது காப்பர் சல்பேட் ஆக மாற சல்ஃப்யூரிக் அமிலம் தேவைப்படுகிறது. எந்தவொரு அமிலமும் பாத்திரத்தின் உட்புறத்தில் இருந்து தாமிரத்தை வெளியேற்றக்கூடும். எனவே காப்பர் கன்டென்ட் ஆனது திரவத்தில் அதிகரிக்கும். எனினும், அதிகப்படியான காப்பர் வாந்தியை தூண்டச் செய்யும். தேங்காய் நீர் காப்பர் பாத்திரத்தின் உட்புறத்தில் இருந்து காப்பரை வெளியேற்றலாம் மற்றும் வாந்தியை ஏற்படுத்தச் செய்யலாம். ஆனால் காப்பரில் இருந்து காப்பர் சல்பேட் ஆக மாற்றாது ” எனக் கூறியுள்ளார்.

தேங்காய் தண்ணீரிலுள்ள அமிலமும், தாதுக்களும் செப்புடன் கலந்து தேங்காய் தண்ணீரை காப்பர் சல்பேட்டாக மாற்றியதாக பரவிய தகவலில் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், தேங்காய் நீரில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. அஸ்பார்டிக், குளுட்டாமிக் உள்ளிட்ட அமிலங்கள் உள்ளன. ஆனால் மருத்துவர் கூறியது போல் காப்பரை காப்பர் சல்பேட் ஆக மாற்றத் தேவைப்படும் சல்ஃப்யூரிக் அமிலம் இடம்பெறவில்லை.

2 ஆண்டுகளுக்கு முன்பு Practo என்ற இணையதளத்தில் கேட்கப்பட்ட கேள்வி பதிலில் , கர்ப்பமாய் இருந்த பெண் ஒருவர், நான் 11 வார கர்ப்பமாக இருக்கிறேன். காப்பர் பாத்திரத்தில் அரை மணி நேரம் வைத்திருந்த தேங்காய் தண்ணீரை குடித்துள்ளேன். இது எனக்கு பாதுகாப்பானதா ” எனக் கேட்டு இருந்தார். அதற்கு மருத்துவர் ராதிகா அளித்த பதிலில், இது எந்தவித பிரச்சனையையும் ஏற்படுத்தாது எனக் கூறியுள்ளார்.

பொதுவாக நாம் செப்பு பாத்திரத்தில் நீண்ட நேரம் தண்ணீரை வைத்து இருந்தால் கூட அதன் சுவையில் மாற்றம் தெரியக்கூடும். அதுபோல், தேங்காய் தண்ணீரை செப்பு பாத்திரத்தில் வைத்து இருந்தால் கூட சுவையில் மாற்றம் ஏற்படலாம். மேலும், செப்பு பாத்திரத்தில் தேங்காய் தண்ணீரை வைத்து குடிப்பது வாந்தி எடுப்பது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாமே தவிர உயிருக்கு ஆபத்து என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. 

Advertisement

நமக்கு மருத்துவர் தரப்பில் இருந்து கிடைத்த பதில், இணைய ஆதாரங்கள் அடிப்படையில், செப்பு (காப்பர்) பாத்திரத்தில் தேங்காய் தண்ணீரை அருந்துவது உயிருக்கு ஆபத்து என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை என அறிந்து கொள்ள முடிகிறது. எனினும், வாந்தி போன்ற பக்க விளைவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

விளக்க முடியாத, ஆதாரமில்லாத, தவறான தகவல்களுடன் மருத்துவம் தொடர்பாக ஏராளமான பதிவுகள் சமூக வலைதளங்களில் குவிந்து இருக்கின்றன. ஆகையால், சமூக வலைதளங்களில் பார்க்கப்படும் மருத்துவ மற்றும் எச்சரிக்கை தகவல்களை முழுமையாக நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button