கொரோனா பாதித்தவர்களை துரத்தி பிடிக்கும் சீன போலீஸ் வீடியோவா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
நாங்கள் இங்கே அமர்ந்திருக்கிறோம்.. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் * கொரோனா வைரஸை * கேலி செய்கிறோம். கொரோனாவின் உண்மையான அழிவை நீங்கள் காண விரும்பினால் சீனாவிலிருந்து இந்த வீடியோவைப் பாருங்கள். ஒருமுறை அல்ல, இரண்டு முறை அல்ல, 3 முறை கவனமாக பாருங்கள். இந்த தொற்றுநோயின் பிடியில் சிக்கியுள்ளவர்களைப் பிடிக்க காவல்துறை நிர்வாகம் அங்கு எத்தனை பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். உங்கள் இதயமும் அதிர்ச்சியடையும் இந்த வீடியோவைப் பார்ப்பது.
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கிய சீனாவில் வைரசால் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கம் மற்றும் போலீசார் கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஒடுக்குவதாக பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகின்றன.
ஆங்கிலப் பதிவில் இருந்து மொழிப்பெயர்ப்பு செய்து பதிவிட்ட பதிவுடன் கூடிய வீடியோவில், ” ரயில் நிலையத்தில், ரயிலுக்குள் இருக்கும் மக்களை போலீசார் கடுமையாக தாக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. அதை சிலர் கேமராக்கள் மூலம் பதிவும் செய்கின்றனர்.
கொரோனா வைரஸ் பற்றி நாம் கேலி செய்துக் கொண்டு இருக்கும் பொழுது, சீனாவில் கொரோனா பாதித்தவர்களை பிடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை பாருங்கள் என இவ்வீடியோ முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இதற்கு முன்பாகவும், சீனாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களை நாய் போல் பிடித்து இழுத்து செல்லும் காட்சி என சீனப் போலீஸ் பயிற்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தவறாக வைரல் செய்யப்பட்டது. அது குறித்தும் நாம் விரிவாக கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அந்த வீடியோ போன்றே இந்த வீடியோவும் தவறானதாக இருக்கக்கூடும் என்ற சந்தேகங்கள் இருந்தன.
மேலும் படிக்க : கொரோனா பாதித்தவர்களை நாய் போல் பிடிப்பதாக வைரலாகும் வீடியோ ?| உண்மை என்ன ?
வீடியோவில் இருக்கும் நபர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதியோ கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் போலவும், எச்சரிக்கையுடன் இருப்பது போலவும் இடம்பெறவில்லை. ஆகையால், வீடியோவில் இடம்பெற்ற காட்சியை ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 ஜூலை 22-ம் தேதி threader என்ற இணையதளத்தில் ஹாங்காங் பகுதியில் நடைபெற்ற போராட்டம் மற்றும் தாக்குதல் குறித்த கட்டுரையில் வைரல் வீடியோ இடம்பெற்று இருந்தது.
கடந்த ஆண்டில் ஹாங்காங் பகுதியில் மிகப்பெரிய கலவரங்கள் உண்டாகின. கலவரத்தின் பொழுது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை உறுதி செய்ய முடிந்தது. மேலும், ரயில் நிலையத்தில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் குறித்து தி கார்டியன் உள்ளிட்ட பல முன்னணி செய்தி ஊடகங்கள் வைரல் வீடியோவை வெளியிட்டு உள்ளன.
2019-ம் ஆண்டு ஹாங்காங்கில் உள்ள ” Prince Edward station ” பகுதியை முற்றுகையிட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை ஒடுக்க போலீசார் வன்முறையில் இறங்கிய சம்பவத்தின் பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து செல்லும் காட்சி என தவறாக சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளன. ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்பாக செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிந்து விட்டு பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.