வைரலாகும் பிணக் குவியலின் கோரமான வீடியோ காட்சிகள்.. டெல்லி மருத்துவமனை அல்ல !

பரவிய செய்தி
டெல்லி மருத்துவமனையில் குவிந்து இருக்கும் பிணக் குவியல் என பரவும் வீடியோ !
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இறந்தவர்களின் உடல்களை மொத்தமாக எரிப்பதும், எரிப்பதற்கு இடம் இல்லாமல் காத்திருந்த நிகழ்வுகளும் இந்தியாவில் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், டெல்லி மருத்துவமனையில் எடுக்கப்பட்டது எனக் கூறி 20 நொடிகள் கொண்ட வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையின் வராண்டா போன்ற பகுதியில் தொடங்கி உடைகள் இல்லாமல் பிணக் குவியல் திறந்த நிலையில் இருப்பதும், பாதுகாப்பு உடை அணிந்த சிலர் அங்கே இருக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி இருக்கின்றன.
யூடர்ன் இன்பாக்ஸ் மூலம் இவ்வீடியோவை அனுப்பிய வாசகர் ஒருவர் இவற்றின் உண்மைத்தன்மை குறித்து கேட்டு இருந்தார்.( இரத்தம் கரை நிறைந்த பிணக் குவியல் என்பதால் வீடியோவை பதிவிடவில்லை).
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீப்ரேம்களை பிரித்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இதே வீடியோ சில மாதங்களுக்கு முன்பாக கொரோனாவால் இறந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை திருடுவதாகக் கூறி பரவுவதாகவும், ஆனால் உண்மை என்னவென்றும், வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவலும் தெரியவில்லை என vimeo தளத்தில் வெளியான வீடியோவிற்கு ஒருவர் கமெண்ட் செய்து இருக்கிறார்.
2021 பிப்ரவரியில் maldita.es எனும் உண்மைக்கண்டறிதல் தளம் இவ்வீடியோ குறித்து ஸ்பானிஷ் மொழியில் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. அதில், ரஷ்யாவின் டிஜிட்டல் மீடியாவான Bloknot உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வீடியோ வெளியாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
View this post on Instagram
2020 நவம்பரில் Bloknot இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இவ்வீடியோ கடந்த ஆண்டில் சிரியாவிலும் பரவி இருக்கிறது.
verify-sy எனும் சிரியா உண்மைக்கண்டறிதல் தளம், இவ்வீடியோ சிரியாவைச் சேர்ந்தது அல்ல, வீடியோவின் ஒரே இடத்தில் ரஷ்யா எழுத்து இருப்பதாகவும், ரஷ்ய மொழியில் பேசியதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், டெல்லி மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக பரவும் பிணக் குவியலின் வீடியோ ரஷ்யாவில் எடுக்கப்பட்டதாக, ரஷ்யா உடன் தொடர்புடையதாக சில தரவுகள் உள்ளன. இவ்வீடியோவின் தொடக்கம் மற்றும் காரணம் தெரியவில்லை. எனினும், இவ்வீடியோ இந்தியா இல்லை என்பது மட்டும் உறுதியாக அறிந்து கொள்ள முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.