குப்பையில் கொட்டப்பட்ட முட்டைகள் கோழிக்குஞ்சுகளாக மாறினவா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் உடன் பரவிய வந்ததிகளால் கோழி, முட்டைகளின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. வதந்தியின் விளைவால் சில இடங்களில் கோழிகள் மற்றும் முட்டைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன.
அப்படி குப்பைகளில் வீசப்பட்ட கோழி முட்டைகள் வெயிலின் தாக்கத்தால் கோழிக்குஞ்சுகளாக பொரித்து உள்ளதாக கீழ்காணும் வீடியோ முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைராலாகி உள்ளது.
வைரலான வீடியோவை புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். பின்னர் அந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார்.
உண்மை என்ன ?
வைரலாகி வரும் வீடியோ உண்மையில் எடுக்கப்பட்டது இந்தியாவில் இல்லை. இந்தியாவில் வைரலாவதற்கு முன்பே மார்ச் 27 முதல் 30-ம் தேதிக்குள் பாகிஸ்தான் நாட்டின் செய்திகளில் அவ்வீடியோ குறித்து வெளியாகி இருக்கிறது.
மார்ச் 28-ம் தேதி GNN செய்தியின் யூடியூப் சேனலில் வீடியோ குறித்த செய்தி இடம்பெற்று இருக்கிறது. செய்திகளில், ஒரு பகுதியில் கொட்டப்பட்ட முட்டைகள் போதுமான வெப்பநிலை கிடைத்த காரணத்தினால் குஞ்சு பொரித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது .
ஆனால், உண்மையில் வீடியோ காண்பிக்கப்பட்டு இருப்பது போன்று முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொரிக்க வாய்ப்பில்லை. ஒன்று அல்லது இரண்டு குஞ்சுகள் பொரித்தால் கூட அவை இறுதியில் உயிர் வாழ்வது ஆச்சரியம்.
ஒருவேளை வணிகத்திற்காக கோழிகளை வளர்க்கும் பண்ணை நிறுவனம் எடுத்துச் சென்ற குஞ்சுகள் அப்பகுதியில் சரிந்து கீழே சென்ற காரணத்தினால் அங்கேயே விட்டு சென்று இருக்கலாம் அல்லது விலை சரிந்த காரணத்தினால் கோழிக் குஞ்சுகளை கைவிட்டதால் இப்படி நிகழ்ந்து இருக்கலாம். எனினும், உறுதியான காரணங்கள் தெரியவில்லை. இருப்பினும், கொரோனா வைரஸ் உடன் தொடர்புப்படுத்தி வைரலாகும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.