This article is from Jun 27, 2020

கொரோனாவை ஓட ஓட விரட்டும் ஹோமியோபதி மருந்தா ?

பரவிய செய்தி

தமிழ் நாட்டை சேர்ந்த அய்யா கிருஷ்ணமூர்த்தி கண்டு பிடித்த கொரானாவை ஓட ஓட விரட்டும் மருந்து

மதிப்பீடு

விளக்கம்

கோவிட்-19 பெரும் தொற்றின் அச்சுறுத்தல் தொடங்கியதில் இருந்து கொரோனாவிற்கு இதுதான் தீர்வு என பாரம்பரியம், அலோபதி, ஹோமியோபதி முறையில் பல்வேறு மருந்துகளின் பெயர்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதை பார்த்து இருப்பீர்கள். ஆனால், இன்றுவரை கொரோனாவை விரட்டும் மருந்து என எந்தவொரு மருந்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கீழ்காணும் வீடியோவில், ” மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி பரிந்துரை செய்த ஹிப்போனீசியம் மருந்தினை கையின் நடுவில் ஒரு சொட்டு தடவி விட வேண்டும். இது 30 நாட்களுக்கு தடுப்பாக இருக்கும். 30 நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த மருந்தினை தடவ வேண்டும். மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை ஒரு சொட்டு விட்டால் 24 மணி நேரத்தில் நெகட்டிவ் எனக் காட்டுகிறது. இந்த அபூர்வமான மருந்தினை பயன்படுத்தி கொரோனாவை ஒழிப்போம் ” எனக் கூறி இருக்கிறார்.

இந்த வீடியோ 3.5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று, 2.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து செல்கிறது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

ஒரு சொட்டு மருந்து 24 மணி நேரத்தில் கொரோனாவை விரட்டுகிறது என பேசுவதை கேட்கையில் நையாண்டிக்காக இவ்வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றியது. எனினும், கோவிட்-19 பெரும் தொற்று நிலவும் நேரத்தில் தடுப்பு மருந்து என பதிவிடப்படும் எந்தவொரு தவறான தகவலும் ஆபத்தே என அறிந்து கட்டுரை வெளியிட தீர்மானித்தோம்.

கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் குறைவான, மிதமான மற்றும் தீவிரமான நிலையில் இருக்கிறாரகள். ஒவ்வொருவருக்கும் ஏற்றார் போல் சிகிச்சையும், மருந்தும் அளிக்கப்படுகிறது. பெரும்பாலும் வாய்வழி மருந்துகளே பயன்படுத்தி வருகிறார்கள். நோய் தாக்குவதை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவுகள், பல்வேறு சுகாதார வழிகாட்டுதல்களும் அறிவுறுத்தப்பட்டன. ஆகையால். தோலில் ஒரு சொட்டு மருந்தினை தடவினால் சுவாசக்கோளாறை ஏற்படுத்தும் வைரசை தடுக்க முடியுமா என்கிற கேள்வி இருக்கிறது. கொரோனா வைரஸ் உடலுக்குள் பல வழிகளில் நுழைய வாய்ப்புகள் இருக்கிறது.

Hippozaenium எனும் ஹோமியோபதி மருந்து இருப்பதை கூகுள் தேடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. சில ஹோமியோபதி இணையதளத்தில் கொரோனா வைரசுடன் தொடர்புப்படுத்தி அந்த மருந்தின் பெயரும் இடம்பெற்று இருந்ததை பார்க்க முடிந்தது.

ஆகையால், இது குறித்து ஹோமியோபதி மருத்துவர் வித்யா அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, ” கோவிட்-19 தொற்றுக்கான ஆர்செனிகம் அல்பம் உள்ளிட்ட மருந்துகளையே நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். எங்களது குழுவில் இருக்கும் மருத்துவர்கள் யாரும் இந்த மருந்தினை பயன்படுத்தியது இல்லை. ஹோமியோபதியில் 1000-க்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன. நாங்கள் இதைப் பயன்படுத்தவில்லை. பயன்படுத்தாத மருந்து குறித்து உறுதியாக சொல்ல முடியாது அல்லவா. Hippozaenium எனும் மருந்து இருக்கிறது. மருந்தின் இண்டிகேசன்களை வைத்து பார்க்கையில் கோவிட் தொற்று போன்றவற்றில் ஏற்படும் சுவாச சிக்கல்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால் நாம் நோயாளிகளுக்கு பயன்படுத்தாத காரணத்தினால் உறுதியாக சொல்ல முடியாது. உதாரணமாக, தடுப்பு மருந்தாக ஆர்செனிகம் அல்பம் கொடுத்த போது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என நமக்கு தெரிகிறது. அதற்காக நம்மிடம் சில தரவுகள் உள்ளன. ஹோமியோபதியில் திரவ நிலையில் இருக்கும் மருந்துகளும் உள்ளன. நோயாளிகள் மருந்துகள் எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் போது உடல் மூலம் மருந்துகள் அளிக்கப்படுகிறது. நீங்கள் கூறிய மருந்தில் தரவுகள் இல்லாமல் எதையும் உறுதியாக சொல்ல முடியாது ” எனத் தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில கோவிட்-19 தொற்றில் ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்த அனுமதி அளித்தது. அதிலும், முக்கியமாக பரிந்துரைக்கப்படும் ஆர்செனிகம் அல்பம் 30 கோவிட்-19 தொற்றை தடுக்கிறது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. அதை சுவாச சிக்கலுக்கு பயன்படுத்துவதாக கூறப்பட்டது. ஆர்செனிகம் அல்பம் போல Hippozaenium எனும் மருந்தும் சுவாச சிக்கலுக்கு பயன்படுத்தும் ஹோமியோபதி மருந்தாக இருக்கலாம். எனினும், கோவிட்-19 தொற்று தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதலில் Hippozaenium பெயர் இடம்பெறவில்லை.

ஆனால், அறிவியல் ரீதியாக Hippozaenium எனும் ஹோமியோபதி மருந்து கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் அல்லது ஒரே நாளில் கோவிட்-19 பாசிடிவ் நோயாளியை நெகட்டிவ் ஆக மாற்றும் என்பதற்கும் தரவுகளோ, ஆதாரங்களோ இல்லை.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலில், Hippozaenium எனும் ஹோமியோபதி மருந்தை கையில் தடவினால் கொரோனா வராது, 24 மணி நேரத்தில் கொரோனா பாசிடிவை நெகட்டிவ் ஆக மாற்றும் எனக் கூறி பரவும் தகவலுக்கு ஆதாரமில்லை. தவறான மருந்துகளை பயன்படுத்தி மேலும் சிக்கலை உண்டாக்கி கொள்ள வேண்டாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader