BA.5 வகை கொரோனா மனித மூளையைத் தாக்கும் தன்மை கொண்டது எனத் தவறாகச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !

பரவிய செய்தி

நேரடியாக மூளையை தாக்கும் புதிய வகை கொரோனா..! சிக்கினால் கண்டிப்பா மரணம் தான் – சத்தியம் டிவி 

Youtube link 

மதிப்பீடு

விளக்கம்

‘சத்தியம் டிவி’ 2022, டிசம்பர் 31ம் தேதி “நேரடியாக மூளையைத் தாக்கும் புதிய வகை கொரோனா..! சிக்கினால் கண்டிப்பா மரணம் தான்” என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை பதிவிட்டுள்ளது. 

அச்செய்தியில், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சீனாவில் பரவும் புதியவகை கொரோனாவான BA.5 அதிகமாக மூளையைத் தாக்கும் அபாயம் கொண்டது என்றும், இவ்வகை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் எடை வேகமாகக் குறைதல், மூளை வளர்ச்சி பாதிப்பு போன்ற காரணங்களால் உயிர் இழக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இவ்வகை கொரோனா பாதிப்பு 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது எனச் சத்தியம் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Archive link | News archive link

இதே தகவலை ‘ஒன் இந்தியா தமிழ்’ இணையதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது. 

உண்மை என்ன ?

செய்திகளில் கூறப்பட்டிருக்கும் BA.5 கொரோனா ஆய்வு குறித்து இணையத்தில் தேடினோம். Biorxiv’ என்ற இணையதளத்தில் 2022, டிசம்பர் 25ம் தேதி Omicron BA.5 infects human brain organoids and is neuroinvasive and lethal in K18-hACE2 mice” என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக் கட்டுரை கிடைத்தது.  

Archive link 

அதில், செயற்கையாக உருவாக்கப்பட்ட மனித மூளை திசுவை (human cortical brain organoids) பாதிக்கக்கூடியதாக ஒமைக்ரான் BA.5 உள்ளது என்றும், இந்த வகை கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்ட எலிகளைக் கொல்லும் தன்மை கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வு மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப்பற்றி மனிதர்களைக் கொண்டே செய்யப்பட்ட ஆய்வு அல்ல. 

BA.5 குறித்த ஒன் இந்தியா தமிழ் செய்தியில்சவுத் சீனா போஸ்ட்’ என்ற நாளிதழின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் வெளியான செய்தி குறித்துத் தேடுகையில், PIB (Press Information Bureau) டிவிட்டர் பதிவொன்று  கிடைத்தது.

Archive link

அப்பதிவில், புதிய ஒமைக்ரான் மூளையைப் பாதிக்கும் தன்மை  கொண்டது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அது ஒரு தவறான தகவல் என்றும், செய்திகளில் குறிப்பிட்டுள்ள ஆய்வின் முடிவுகள் எந்தளவிற்கு மனிதர்களுக்கும் பொருந்தும் என்பது நிரூபிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அப்பதிவில் உள்ள புகைப்படத்தில், South China Morning Post என்ற இணையதளத்தின் செய்தியும் காண முடிகிறது.  PIB டிவிட் செய்துள்ள இதே தகவலைச் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப் பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் காண முடிகிறது. அப்பதிவிலும், சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தப்படாத மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து இது ஒருதவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.

முடிவு : 

நம் தேடலில், புதிய வகை கொரோனா மூளையைத் தாக்கும் தன்மை கொண்டது என்றும், இந்த வகை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மரணம் நிச்சயம் என்றும் சில ஊடகங்களில் வந்த செய்தி உண்மை அல்ல என ஆய்வறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader