கோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை சுகாதார வழிகாட்டுதலின்படி அப்புறப்படுத்தாமல் கங்கை நதியில் வீசி செல்வதாக படகில் இருந்து மூடப்பட்ட உடல் நதியில் வீசப்படும் புகைப்படங்கள் சில இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
படகில் இருந்து இறந்தவரின் உடலை கங்கை நதியில் வீசும் புகைப்படத்தை எடுத்தது ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் புகைப்பட கலைஞர் பர்வேஸ் கான் எனத் தெரிய வந்தது. அவரை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்ட போது ஜூலை 7-ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளில் ” பீகாரின் உள்ள பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து யாரும் பெற்றுச் செல்ல இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் வீசியதாக ” வெளியான கட்டுரையின் இ-பேப்பர் லிங்கை அனுப்பி இருந்தார்.
காளி காத் அருகே கங்கை நதியில் யாரும் பெற்றுச் செல்லாத இறந்தவர் உடலை பிஎம்சிஎச்-ஐ சேர்ந்தவர்கள் அப்புறப்படுத்தியது தொடர்பாக பாட்னா எஸ்.எஸ்.பி உபேந்திரா சர்மா கூறுகையில், ” யாரும் பெற்றுச் செல்லாத உடல்களின் உடற்கூறாய்வு பணிகள் முடிவடைந்த 72 மணி நேரத்திற்கு பிறகே அப்புறப்படுத்தப்படும். இந்த செயலில் காவல்துறையினரும் ஈடுபட்டு இருந்தால் அவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை கோவிட்-19 தொற்றால் இறந்து இருந்தால் காவல்துறை உதவியுடன் மாவட்ட நிர்வாகமே இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் ” எனக் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
யாரும் வாங்கிச் செல்லாத இறந்தவரின் உடலையே கங்கை நதியில் வீசி உள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் யாரும் பெற்றுச் செல்லாத உடல்களை நதியில் வீசுவது அடிக்கடி நிகழ்வதாகவும, அதுவும் கொரோனா பயத்தால் சாதாரண நோயால் இறந்தவர்களின் உடல்களை கூட மக்கள் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது.
மேலும், வைரலாகும் 4 புகைப்படத்திலும் இருப்பது ஒரு உடலே தவிர பல உடல்கள் இல்லை என புகைப்பட கலைஞர் பர்வேஸ் கான் தெரிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி, இறந்தவர் எந்த நோயினால் இறந்தார் என்கிற விவரமும் தெரியவில்லை. அதேபோல், இந்த விவகாரத்தில் சிக்கிய பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கோவிட்-19-க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை அல்ல எனத் தெரிய வந்துள்ளது.
முடிவு :
நம் தேடலில், பீகாரில் கோவிட்-19 நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை கங்கை நதியில் வீசுவதாக பரவும் புகைப்படத்தில் ஒரு உடலே நதியில் வீசப்படுகிறது. யாருமே பெற்றுச் செல்லாத இறந்தவர் எந்த நோயால் பாதிக்கப்பட்டார் எனத் தெரியவில்லை. எனினும், இதில் சிக்கிய மருத்துவமனை கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கவில்லை எனத் தெரிந்து கொள்ள முடிகிறது.