தனிமைப்படுத்துதல் அரங்கத்தில் லுங்கி டான்ஸ், கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள்| எங்கு நடந்தது?

பரவிய செய்தி
இவர்கள் நேரு அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கொரானா நோயாளிகள்.
மதிப்பீடு
விளக்கம்
பெரிய அரங்கத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட மக்கள் லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கும் வீடியோ வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது. நேரு அரங்கத்தில், சென்னையில் உள்ள கொரோனா நோயாளிகள் டான்ஸ் ஆடுவதாக கிண்டல் செய்தும் பகிரப்பட்டு வருகிறது.
எங்கு எடுக்கப்பட்டது ?
வைரலாகும் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என அறிய வீடியோவின் ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் உள்ள அரசு கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் இருந்தவர்கள் லுங்கி டான்ஸ் பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலாகி வருவதாக ஜூன் 10-ம் தேதி india.com எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
திரிபுராவில் உள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் உள்ளவர்கள் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை சென்னையில் உள்ள அரங்கத்தில் நிகழ்ந்ததாக பரப்பி வருகிறார்கள். இதே வீடியோவை தெலங்கானா மாநிலத்தில் உள்ள காச்சிபௌலி அரங்கத்தில் நிகழ்ந்ததாகவும் தவறாக பரப்பி இருந்தனர்.
கிரிக்கெட் விளையாடும் வீடியோ :
இதேபோல், அரங்கத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகம் வைரல் செய்யப்பட்டது. அந்த வீடியோ ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா பகுதியில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் விளையாடிய போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோவை ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
Have space, will play. Quarantine time pass. 🏏 pic.twitter.com/2rYZFUrGVl
— Omar Abdullah (@OmarAbdullah) June 10, 2020
அரங்கத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் பாடலுக்கு நடனமாடுவது, கிரிக்கெட் விளையாடுவது என தங்களின் நேரத்தை செலவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் நேர்மறையான ஆதரவையும், கேலிக்கும் உள்ளாகி வருகிறது.