This article is from May 13, 2021

ஆவி பிடித்தல், கிராம்பை வாயில் வைத்திருத்தல் கொரோனாவை அழிக்குமா ?

பரவிய செய்தி

மிக முக்கியமான & அவசரமான பதிவு எல்லாருக்கும் பகிருங்கள். இந்த லாக்டவுன் காலத்தில் மூன்று மருத்துவ முறைகளை தவறாமல் கடைபிடிப்பதன் மூலம் கொரோனா  வைரஸை நம் தேசத்தில் இருந்தே அழிக்கமுடியும்.

1). 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொரோனா முற்றிலும் அழிந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மூக்கின் உள்பகுதியில் இருக்கும் கொரோனா வைரஸை அழிக்க சிறந்த வழிமுறை “ஆவிபிடிப்பது” மட்டுமே. மெடிக்கல் கடையில் விற்கும் மாத்திரையை பயன்படுத்தாமல், வீட்டில் சிறிதளவு நீரில் மஞ்சள், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிது வேப்பிலையை போட்டு ஆவிபிடிப்பது மிகச்சிறந்தது.

2). வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ஒரு கிராம்பை வாயில் போட்டுக்கொள்ளுங்கள். அது வாயில் இருக்கும் நேரம் வரை கொரோனா வைரஸ் வாய் அல்லது மூக்கின் வழியே நுழைந்தாலும் உடணடியாக கிராம்பின் காரத்தன்மையால் இறந்துவிடும்.

3). தேங்காய் பாலில் கிராம்பை பொடி செய்து அதில் போட்டு தினமும் ஒரு முறை குடித்துவர உடலில் ஆக்ஸிஜன் அளவை 95% க்கு கீழே செல்லாமல் தடுத்திட முடியும். ஆக்ஸிஜன் சிலிண்டருக்கான தேவையும் இருக்காது..

– நீங்கள் படித்து தெரிந்துக்கொண்டதை போல எல்லோருக்கும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி தமிழகம் முழுக்க சென்றடைந்து பயனடைவதன் மூலம் கொரோனா இல்லா மாநிலமாக உருவாக்க முடியும். ஒண்றினைவோம்.. வென்றெடுப்போம்

மதிப்பீடு

விளக்கம்

கோவிட்-19 தொற்றால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் வைக்கும் நிலை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், தொற்று பாதிப்பு தொடர்பாக பல்வேறு மருந்துகளும், வீட்டு வைத்திய முறைகளும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த ஓராண்டிற்கு மேலாகவே பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவற்றில் ஒன்றாக, சில நாட்களாக மேற்காணும் தகவல் ஒன்று பரவி வருகிறது.

உண்மை என்ன ?

சித்தா ஆராய்ச்சி கழகத்தில் உள்ள விஞ்ஞானி ஹரிஹர மஹாதேவ் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், ” 50-60 செல்சியஸ் வெப்பநிலையில் வைரஸ் இறந்து விடும் என சொல்ல வாய்ப்பில்லை. நீரில் மஞ்சள், இஞ்சி போன்றவை கலந்து 3-5 நிமிடங்களுக்கு நீராவியை உள்ளிழுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை, அது கிருமிகளின் பெருக்கத்தை நன்றாகவே குறைக்கிறது. ஆனால், இதற்கு அறிவியல்ரீதியாக எந்த சான்றுகளும் இல்லை. எனினும், நீண்டகாலமாக நாம் பயன்படுத்தி வருவதன் மூலம் சொல்கிறோம்.

கிராம்பு வாயில் உள்ள அமிலத் தன்மையை மாற்றி விடும். குறிப்பிட்ட அமிலத்தன்மையில் வைரஸ் வளர்வதற்கான சூழ்நிலை இல்லை. ஆனால், கிராம்பில் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக தற்போது வரை எந்த ஆய்வுக் கட்டுரையும் இல்லை. இவற்றை பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இதுதான் கொரோனாவை ஒழிக்க தீர்வு, தப்பித்து விடலாம் எனக் கூற முடியாது. இதை நம்பி வெளியே சுற்றுவது தவறு.

தேங்காய் பாலில் கிராம்பை கலந்து குடித்தால் ஆக்சிஜன் அளவு குறைவதை தடுக்கலாம் எனக் கூறுவது போல் ஏதும் கிடையாது. ஏனென்றால், தேங்காய் பாலை அளவுக்கு அதிகமாக எடுப்பதால் செரிமான பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது ” எனத் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து அலோபதி மருத்துவர் பிரவீன் கூறுகையில், நீராவியை உள்ளிழுத்தல் (ஆவி பிடித்தல்) தடிமனான சளி மற்றும் சைனஸைக் குறைக்க உதவும். இதன் மூலம் நெரிசல் குறையும் மற்றும் சுவாசத்திற்கு நன்றாக இருக்கும். இது கிட்டத்தட்ட அனைத்து பாரம்பரிய மருந்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நீராவி கோவிட் தொற்றை கொல்லும் எனக் கூறுவது தவறானது. அது கோவிட் வைரஸைக் கொல்லாது. ஆவி பிடிப்பதால் எந்த தீங்கும் இல்லை, ஆனால் சூடான நீரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ” எனத் தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில், ஒரு துளி எலுமிச்சை சாற்றை மூக்கில் விட்டால் ஆக்சிஜன் அளவு அதிகாரிக்கும் எனப் பரவிய வாட்ஸ் அப் தகவலை நம்பி கர்நாடகாவில் ஆசிரியர் ஒருவர் செய்து பார்த்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது.

அரசு சார்பில் குறைவான பாதிப்பு கொண்டவர்களுக்கு சித்தா, ஆயுர்வேத உள்ளிட்ட முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் சித்தா, ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் வீட்டு வைத்தியம் எனக் கூறி மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் மூலம் கொரோனாவை ஒழித்து விட முடியும், குணப்படுத்த முடியும், ஆக்சிஜன் அதிகரிக்க முடியும் என நிரூபிக்கப்படாத பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்.

முடிவு :

நம் தேடலில், ஆவிபிடிப்பது, கிராம்பை பயன்படுத்துவது போன்றவையால் எந்தவித தீங்கில்லை என்றாலும், அது கொரோனாவை ஒழிக்கும், அதை சரி செய்ய அது மட்டுமே தீர்வு எனக் கூறுவது தவறானது. அதற்கு அறிவியல்ரீதியாக எந்த சான்றுகளும் இல்லை.

தேங்காய் பாலில் கிராம்பை கலந்து குடித்தால் ஆக்சிஜன் அளவை கட்டுக்குள் வைத்திட முடியும் என பரவும் தகவலுக்கு எந்த ஆதாரமும் இல்லை, அது தவறானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader