கொரோனாவால் குடும்பத்தை இழந்தவர் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோவா ?

பரவிய செய்தி
இத்தாலி நாட்டில் தன் குடும்பத்தை கொரோனா பாதிப்பினால் இழந்த நபர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். போதும் கடவுளே இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத்திருக்கட்டும்.
மதிப்பீடு
விளக்கம்
நோவல் கொரோனா வைரசால் அதிக உயிர்களை இழந்த நாடாக இத்தாலி போராடி வருகிறது. இத்தாலி நாட்டில் கொரோனா வைரசால் தன் குடும்பத்தை இழந்தவர் கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக ஓர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம். அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 டிசம்பர் 27-ம் தேதி hoodsite எனும் இணையதளத்தில் புகைப்படத்தில் காண்பிக்கப்பட்டு இருக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி இருக்கிறது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள வாலென்சியா ஹோட்டலின் உச்சியில் ஒரு நபர் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக தலைப்பிட்டு உள்ளனர். அதை மையமாகக் கொண்டு தேடுகையில், தற்கொலை சம்பவம் குறித்து 2019 டிசம்பரில் வாலென்சியா போலீஸ் முன்பே உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் டிசம்பர் 24-ம் தேதி நிகழ்ந்து உள்ளது. தற்கொலை செய்து கொண்டது ஆண் அல்ல, பெண் என maldita எனும் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் டிசம்பர் மாதத்திற்கு பிறகே தீவிரமாய் தெரிய ஆரம்பித்தது. டிசம்பர் மாதங்களில் நோவல் கொரோனா வைரஸ் பிற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஸ்பெயின் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் புகைப்படத்தை கொரோனா வைரஸ் உடன் இணைத்து வதந்தியை கிளப்பி உள்ளனர்.
மேலும் படிக்க : கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலி அதிபர் கண்ணீர் விட்டு அழுதாரா ?
இதற்கு முன்பாகவும், நோவல் கொரோனா வைரஸ் தாக்கத்தை சமாளிக்க முடியவில்லை என்றும், அதனால் ஏற்பட்ட மரணத்தைக் கண்டு இத்தாலி நாட்டின் அதிபர் கண்ணீர் விடும் காட்சி என தவறான புகைப்படம் உலக அளவில் வைரல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.